பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சமண சமயம் தமிழ்நாடு வந்த வரலாறு

சமணர்களின் கடைசித் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் தமது 72ஆவது வயதிலே கி.மு. 527இல் மோட்சம் அடைந்தார். மகாவீரரின் சீடர்களில் ஒன்பதின்மர் கேவலஞானம் வாய்க்கப்பெற்று மகாவீரர் காலத்திலேயே இராசக்கிருக நகரில் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனை நோன்பிருந்து வீடுபேறடைந்தனர்'. கௌதம இந்திரபூதி, சுதர்மர் என்னும் இரண்டு கணாதரர்கள், மகாவீரர் வீடுபேறடைந்த பின்னரும் உயிர் வாழ்ந்திருந்தார்கள்.

மகாவீரர் வீடுபேறடையும் வரையில் தாமே சமண சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர், அவர் சீடர் கௌதம இந்திரபூதி என்பவர் சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பிறகு, மகாவீரரின் மற்றொரு சீடராகிய சுதர்மர் என்பவர் சமய குரவராக இருந்தார். அவருக்குப் பின்னர் அவரின் (சுதர்மரது) சீடராகிய சம்பு சுவாமி சமய குரவராக இருந்தார். அவருக்குப் பிறகு விட்ணுநந்தி என்னும் விட்ணுதேவர் சமயத் தலைவர் ஆனார். அவருக்குப் பிறகு நந்திமித்திரரும், அவருக்கும் பின்னர் அபராசி தரும், அவருக்குப் பிறகு கோவர்த்தனரும், அவருக்குப் பின்னர் பத்திரபாகு முனிவரும் சமயக் குரவராக இருந்தார். பத்திரபாகு முனிவர் காலத்திலேதான் சமண சமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி.மு. 317 முதல் கி.மு. 29.... வரையில் சமண சமயத் தலைவராக இருந்தவர். இவர், சமணசமயத் தலைவராக இருந்ததோடல்லாமல் பேர் பெற்ற சந்திரகுப்தன் (கி.மு. 322-298) என்னும் மௌரிய அரசனுக்கு மத குருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனாகிய மகா அலெக்சாந்தர் காலத்தவன்; இந்தியாவை அரசாண்ட சக்கரவர்த்தி; அசோக சக்கரவர்த்தியின் பாட்டன்?

சந்திரகுப்த அரசனுக்குச் சமய குருவாக இருந்த பத்திரபாகு முனிவர், மகத நாட்டில் பன்னிரண்டு யாண்டு வற்கடம் வரப்போவதை யறிந்து அச் செய்தியை அரசனுக்கு அறிவித்து, வரப்போகும் வற்கடக் கொடுமையினின்றும் தப்பிக்கக் கருதித் தம்மைச் சார்ந்திருந்த பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக் கொண்டு தென்திசை