பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

நோக்கிப் புறப்பட்டு வந்தார். சந்திரகுப்த அரசனும் அரசைத் துறந்து துறவு பூண்டு பத்திரபாகு முனிவரின் சீடனாகி அவருடன் வந்தான். தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர், மைசூர் நாட்டில் வந்து, சமணர் வெள்ளைக் குளம் என்னும் பொருள்படும் சிரவணபென்கொள என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற இடத்தில் தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார். தங்கின பிறகு, தம் சீடர்களில் ஒருவரான விசாகமுனிவர் என்பவரை அனுப்பிச் சோழ பாண்டிய நாடுகளில் சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். பின்னர் கி.மு. 297இல் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனையிருந்து வீடுபெற்றார். இவர் சீடராக இருந்த சந்திர குப்தரும் அவ்விடத்திலேயே சல்லேகனை நோன்பிருந்து உயிர் நீத்தார்.

இச்செய்திகளைச் சமணசமய வரலாறுகளினால் அறியப் படும். அரிசேனர் என்பவர் (கி.பி. 931இல்) இயற்றிய பிருகத் கதா கோசம் என்னும் நூலிலும், தேவசந்திரர் கன்னட மொழியில் (கி.பி. 1838 இல்) இயற்றிய “ராஜா வளி கதெ” என்னும் நூலிலும் சமணர்களின் கர்ண பரம்பரைச் செய்திகளிலும் இவ்வரலாறுகள் கூறப்படுகின்றன. அன்றியும், மைசூரில் உள்ள சந்திரகிரி மலையில் பத்திரபாகு குகை என்னும் குகையும் சந்திரகுப்த பஸ்தி என்னும் சமாதிக் கட்டிடமும் இன்னும் உள்ளன. சந்திரகுப்த பஸ்தியில், சந்திரகுப்த பத்திரபாகு வரலாறுகள் சிற்ப உருவங்களாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் அங்குள்ள சாசன எழுத்துக்களும் இச் செய்திகளை உறுதிப்படுத்துகின்றன.

எனவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ்நாட்டிலே சமணசமயம் பரவச் செய்யப்பட்டது என்று அறிகிறோம். பாண்டிய நாட்டிலே மதுரை மாவட்டத்தில் காணப்படுகிற பிராமி கல்வெட்டெழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை என்றும், அவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் அரசாங்க ஆர்க்கியாலஜி ஆராய்ச்சியாளர் கூறுகிறபடியால், சமணசமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்திருக்க வேண்டும் என்று துணியப் படும். இவர்கள் கூறும் காலமும் பத்திரபாகு முனிவர் தென் திசை நோக்கிவந்த காலமும் ஒத்திருப்பதும் கருதத் தக்கது.