பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

4

/61

கூறுகிறது. இதனால் அபயதானத்தைப் பண்டைக் காலத்தில் சமணர் நடைமுறையில் செய்து வந்தனர் என்பது ஐயமற விளங்குகிறது.

மூன்றாவதாகிய ஒளடத தானத்தையும் சமணர் செய்து வந்தனர். பௌத்தர்களைப் போலவே, சமணப் பெரியார்களும் மருத்துவம் பயின்று நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோயைத் தீர்த்து வந்தனர். சமணர் தம் மடங்களில் இலவசமாக மருந்து கொடுத்து மக்களின் நோயைத் தீர்த்தது அம்மதத்தின் ஆக்கத்திற்கு உதவியாக இருந்தது. சமணர்கள் மருத்துவம் பயின்று மருந்து கொடுத்து நோய் நீக்கிய செய்தி அவர்கள் இயற்றிய நூல்கள் சிவற்றிற்குத் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் என்று மருந்துகளின் பெயரிட்டிருப்பதனாலும் அறியப்படும். உடல் நோயைத் தீர்க்க மருந்து கொடுத்தும் உளநோயைத் தீர்க்க நூல்களை இயற்றிக் கொடுத்தும் சமணர் மக்களுக்குத் தொண்டாற்றி வந்தனர்.

நான்காவதாகிய சாத்திர தானத்தையும் சமணர் பொன்னே போல் போற்றி வந்தனர். சமணப் பெரியோர், (பௌத்தர்களும் கூட) தம் பள்ளிகளிலே ஊர்ச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்தனர். இதனாலேயே பாட சாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று; (பள்ளி என்றால் சமணப்பள்ளி அல்லது பௌத்தப்பள்ளி என்பது பொருள்.) சமணர்களின் சாத்திரதானம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங் களில் நடைபெறும் திருமண நாட்களிலும், இறந்தோருக்குச் செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும், தம் சமய நூல்களைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள். அச்சுப் புத்தகம் இல்லாத அந்தக் காலத்திலே பனை ஏடுகளில் நூல்களை எழுதி வந்தார்கள். ஒரு சுவடி எழுதுவதற்கு பல நாட்கள் செல்லும், பொருட்செலவு (எழுத்துக் கூலி) அதிகம். ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் எழுதி வைத்துக் கொள்ள முடிந்தது. பொருள் அற்றவர் புத்தகம் பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமய நூலைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள். கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலே கன்னட நாட்டில் இருந்த, சமண சமயத்தைச் சார்ந்த அத்திமுப்பெ என்னும் அம்மையார் தனது சொந்தச் செலவிலே சாந்திபுராணம் என்னும் சமணசமய நூலை ஆயிரம் பிரதிகள் எழுதுவித்துத் தானம் செய்தார் என்ப.