பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ

74

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -7

உருத்திரன் என்னும் வைதீகத் தெய்வத்துடன் பொருத்தப்பெற்று இரண்டும் ஒன்றே என்று கற்பிக்கப்பட்டது. ‘சிசன தேவர்’ என்று வைதீகப் பார்ப்பனரால் ஆதிகாலத்தில் இழித்துரைக்கப்பட்ட சிவலிங்க உருவம், திராவிட வைதீக உறவின் பிறகு உயர்ந்த தெய்வமாக வைதீக மதத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொற்றவையைச் சிவனுடைய மனைவி யாக்கிவிட்டனர். (ஆனால், மலையாள நாட்டில் கொற்றவையை (காளியை)ச் சிவனுடைய மனைவியாக்க உடன்படாமல், இன்றும் சிவனுடைய தங்கையாகவே கருதிவருகின்றனர்!) கொற்றவை, காளி, துர்க்கை இவர்களெல்லாம் பார்வதியின் வெவ்வேறு அம்சங்கள் என்று கற்பிக்கப்பட்டன. பார்வதிக்கும் சிவனுக்கும் ஆறுமுகன் மகனாகப் பிறந்தான் என்றும், மற்றும் பல கதைகளும் கற்பிக்கப்பட்டன. மாயோனாகிய திருமால் என்னும் திராவிட தெய்வத்துடன் வைதீக தெய்வங்களாகிய விஷ்ணு, சூரியன் இவைகள் பொருத்தப் பெற்று புதிய தொடர்புகளும் கதைகளும் கற்பிக்கப்பட்டன. இந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய சில தெய்வங்கள் மறைக்கப் பட்டு மறக்கப்பட்டன. விநாயகர் (பிள்ளையார்) முதலிய புதிய தெய்வங்கள் புதிதாகக் கற்பிக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிது புதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிட மதமும் வைதீக மதமும் ஒன்றோடொன்று கலக்கப்பெற்று வைதீகமும் அல்லாததாய் திராவிடமும் அல்லாத தாய் இரண்டும் கலந்ததொரு புதிய மதமாக மாறிற்று. இவ்வாறு புதிதாகத் தோன்றிய மதம்தான் ‘இந்து’ மதம் என்பது. இப்புதிய 'இந்து' மதம் திடீரென்று உண்டாகவில்லை. இந்தத் தொடர்புகளும் கலப்புகளும் மாறுதல்களும் ஏற்படச் சில நூற்றாண்டுகள் சென்றிருக்கவேண்டும்.

இவ்வாறு புதிய உருவம் அடைந்த ‘இந்து' மதத்திற்கு நாட்டிலே சிறிது செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. ஏனென்றால், பெருந்தொகை யினரான திராவிடக் கொள்கையுடைய தமிழரும் சிறு தொகையினரான வைதீகக் கொள்கையுடைய பிராமணரும் இந்தப் புதிய இந்து மதத்தில் சேர்ந்திருந்தனர். ஆயினும் புதிய 'இந்து' மதம் அதிகச் செல்வாக்குப் பெறவில்லை. பின்னர், ‘இந்து' மதத்தில் பக்தி இயக்கம் தோன்றியது. இந்தப் பக்தி இயக்கந்தான் ‘இந்து’ மதத்திற்கு புத்துயிரையும் புதிய ஆற்றலையும் பெருஞ் செல்வாக்கையும் தந்தது.