பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

கோமுகயக்ஷன் உருவம் எருது அல்லது பசு முகத்துடன் சித்திரங் களிலும் சிற்பங்களிலும் அமைக்கப்படுகின்றன. சைவசமயத்தவரும் தம் சிவபெருமானுடைய பரிவாரத் தெய்வங்களில் நந்தி தேவரை முதன்மையாகக் கூறுகின்றனர். சைவரின் நந்தி தேவருக்கும் சமணரின் கோமுக யக்ஷனைப் போன்றே எருது முகம் உள்ளது. சிவன் கோவில்களில் நந்திவாகன சேவை சிறந்ததாகக் கருதப் படுகிறது.

அன்றியும், சமணர்களில் நந்திகணம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இந்தக் கணத்தைச் சேர்ந்தவர் நந்தி என்னும் பெயரைச் சூட்டிக்கொள்வர். அச்சநந்தி, ஆரிய நந்தி. பவணந்தி, புட்பநந்தி, கனக நந்தி முதலிய பெயர்கள் சமண முனிவருக்கு உண்டு. சிவபெருமா னுடைய கயிலாய மலையில் உள்ள நந்தி தேவரது வழியில் வந்த சத்தியஞானதரிசனிகள் என்பவர் மெய் கண்டாருக்குச் சிவஞான போதத்தைப் புகட்டியதாகச் சைவர் கூறுவர். இந்த ஒற்றுமைகளால் இவ்விரண்டு சமயங்களின் பண்டையத் தொடர்பு அறியப்படும்.

4.0.5.

காலனைக் கடந்தது :

ஆருகதரின் அருகக் கடவுளும், சைவரின் விரிசடைக் கடவுளும் காலனைக் கடந்தவர் (இயமனை வென்றவர்) என்று இரண்டு சமய நூல்களும் கூறுகின்றன. இதற்கு, இரண்டு சமய நூல்களில் இருந்தும் இலக்கியச் சான்றுகளைக் காட்டுவோம்.