பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

127

செய்து வெற்றி பெற்றார். அதனோடு அமையாமல், எதிர்வாதம் செய்தவர்களையும் அவைத் தலைவராக வீற்றிருந்த அரசனையும் பௌத்த மதத்தில் சேர்த்தார். இதனால் இவர் புகழ் எங்கும் பரவியது. மற்றொருமுறை, நூறு ஈனயான பௌத்தர்களுடன் ஏழுநாள் வரையில் வாது செய்து வெற்றி பெற்றுத் தமது மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்டினார். மகாயான பௌத்தர்கள் இவரைத் தமது மதத்தை நிலைநிறுத்த வந்த சமயகுரவரெனப் போற்றினார்கள். இவர் பௌத்தமத நூல்களையும் ஏனைய மத நூல்களையும் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கின மையால், அக்காலத்தில் வட இந்தியாவில் பேர்பெற்று விளங்கிய நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவரை ஏற்படுத்தினார்கள். நளாந்தைப் பல்கலைக் கழகத்தின் தலைமைப் பதவி, யாருக்கும் எளிதில் வாய்ப்பதொன்றன்று. துறை போகக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களுக்குத்தான் அப்பதவி வாய்க்கும். இவர்க்கு இத்தலைமைப் பதவி கொடுத்ததிலிருந்து அக்காலத்து மக்கள் இவரை எவ்வளவு உயர்வாக மதித்தனர் என்பது விளங்கும்.

இவருக்குப் பிறகு அப் பல்கலைக்கழகத்தின் தலைமை ஆசிரியராக விளங்கிய புகழ்படைத்த சீலபத்திரர் என்பவர் இவரிடம் பயின்ற மாணவர்களில் தலைசிறந்தவர். தருமபாலர் நளாந்தைக் கழகத்தின் தலைமையாசிரியராய் வீற்றிருந்த காலத்தில், தமிழ் நாட்டிலிருந்து ஒரு பிராமணர் அங்குச் சென்று இவரைத் தம்முடன் வாது செய்ய அழைத்தார். இவர் தமது மாணவராகிய சீல பத்திரரை அப்பிராமணருடன் வாது செய்யச் செய்து அவரைக் கடுமையாகத் தோல்வியுறச் செய்தார். இந்தச் சீலபத்திரரிடத்தில் தான் சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் என்பவர் சமஸ்கிருதம் பயின்றார். சீலபத்திரர் கி.பி. 585 முதல் 640 வரையில் தலைமையாசிரியராக நளாந்தைக் கழகத்தில் இருந்தவர். இந்தத் தரும பால ஆசாரியர் ஏதேனும் நூல் இயற்றினாரா என்பது தெரியவில்லை. யுவாங் சுவாங், தமது யாத்திரைக் குறிப்பில் தருமபால ஆசாரியரின் வரலாற்றைக் கூறியிருக்கிறார்.

தருமபாலர் இளமையிலேயே, அதாவது தமது 32ஆவது வயதில், கி.பி. 560இல் காலமானார். இவருடைய தலை மாணவர் சீலபத்திரர் என்று சொன்னோம். இவரது மற்ற மாணவர்கள்: 1. விசேஷமித்திரர் - இவர் மைத்திரேயர் அருளிச்செய்த ‘யோகசார பூமி' என்னும் நூலுக்கு உரை எழுதியவர். 2. ஜின புத்திரர் - இவர் மைத்திரேயர் அருளிச்செய்த