பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

128

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

‘போதிசத்வபூமி' என்னும் நூலுக்கு உரை இயற்றியவர். 3. ஞானசுந்தரர் - இவர் இத்சிங் என்னும் சீன யாத்திரிகர் இந்தியாவுக்கு வந்தபோது (கி.பி. 671 முதல் 695 வரை யில்) திலக விகாரையில் வாழ்ந்திருந்தார்.

இந்தத் தருமபாலரும் மணிமேகலை நூலில் கூறப்படும் அறவண அடிகளும் ஒருவரே எனச் சிலர் கருதுகிறார்கள். ‘அறவண அடிகள் என்னும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகத் 'தருமபாலர்' என்னும் பெயர் காணப்படுவது கொண்டு இவ்வாறு கருதுகின்றனர் போலும். இந்தக் கருத்துத் தவறானதாகத் தோன்றுகின்றது. ஏனென்றால், அறவண அடிகள் காஞ்சீபுரத்தில் கடைசி நாட்களில் தங்கினதாகக் கூறப்பட்டபோதிலும், அவர் தமது வாழ்நாளில் பெரும் பகுதியைக் காவிரிப்பூம் பட்டினம் முதலிய தமிழ்நாட்டு ஊர்களில் கழித்தவராவர். தரும பாலரோ தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பிறந்தவராக விருந்தும் தமது வாழ்நாட்களின் பெரும் பகுதியையும், கடைசி நாட்களையும் வட இந்தியாவில் கழித்தவர். அறவண அடிகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தருமபாலரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இந்தக் காரணங்களாலும், பிற சான்றுகளாலும் தருமபாலர் வேறு, அறவண அடிகள் வேறு என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது.

15. ஆசாரிய தருமபாலர்

பாலிமொழியில் இவரைத் தம்மபால ஆசாரியர் என்பர். இவரது ஊரைப்பற்றி, "தம்பரட்டே வஸந்தேன நகரே தஞ்சா நாமகே” என்று கூறப்பட்டிருப்பதால், இவர் தாம்பிரபரணி ஆறு பாய்கிற திருநெல் வேலியில் இருந்த தஞ்சை நகரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இந்தத் தஞ்சையைச் சோழநாட்டுத் தஞ்சாவூர் என்று தவறாகக் கருதுகிறார், திரு. பி.சி. லா அவர்கள்.5 என்னை? சோழநாட்டுத் தஞ்சையில் காவேரி ஆறு பாய்கிறதே யன்றித் தாம்பிரபரணி பாயவில்லை. இப்பொழுது சோழநாட்டில் தஞ்சாவூர் இருப்பதுபோல, பண்டைக் காலத்தில் பாண்டிய நாட்டிலும் ஒரு தஞ்சாவூர் இருந்தது. அந்தத் தஞ்சாவூரை ஒரு காலத்தில் அரசாண்ட வாணன் என்னும் சிற்றரசன் மேல் பாடப்பட்டதுதான் தஞ்சைவாணன் கோவை என்னும் சிறந்த தமிழ்நூல். ஆகவே, தம்மபால ஆசாரியாரின் ஊர் பாண்டி நாட்டுத் தஞ்சை என்று கொள்வது அமைவுடைத்து.

தருமபால ஆசாரியர், பாலிமொழியையும் பௌத்த நூல்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். பௌத்தமத உரையாசிரியர்களில் சிறந்தவர்.