பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க' என்று யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர் 'மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம்' என்னும் சூத்திர உரையில் கூறியிருப்பதனால் ‘குண்டலகேசி’ தருக்கநூல் என்பது அறியப்படும். எனவே, பௌத்த சமயச் சார்பான இந்நூல் தருக்க வாயிலாக ஜைனம், வைதீகம் முதலான சமயங்களைக் கண்டிப்பதாகும். இது பெரும்பான்மையும் விருத்தப் பாவினால் இயற்றப்பட்டதாகலின், இதனைக் ‘குண்டல கேசி விருத்தம்' என்றும் கூறுவர். 'குண்டலகேசி முதலான காப்பியமெல்லாம் விருத்தமாம்' என்பது, வீரசோழிய (யாப்பு. 23ஆம் பாட்டு) உரை. எனினும், இடையிடையே கலித்துறைச் செய்யுள் களும் விரவியிருந்தன என்பது "குண்டலகேசி விருத்தம்... முதலாயின வற்றுட் கலித்துறைகளு முளவாம்” என வரும் வீரசோழிய (யாப்பு 21ஆம் செய்யுள்) உரையினால் விளங்குகின்றது. "குண்டலகேசி ... முதலாக வுடைய வற்றிற்றெரியாத சொல்லும் பொருளும் வந்தன வெனின், அகலக் கவி செய்வானுக்கு அப்படி யல்லாதாகாதென்பது. அன்றியும், அவை செய்த காலத்து அச் சொற்களும் பொருள்களும் விளங்கி யிருக்கும் என்றாலும் அமையு மெனக் கொள்க” என்ற வீரசோழிய (அலங். 4ஆம் செய்யுள்) உரைக் குறிப்பினால், இக்காவியத்தில் பொருள் தெரியாத சொற்கள் சில இருந்தன என்பது விளங்குகின்றது.

இந்நூலாசிரியர் நாதகுத்தனார் என்பவர். இதனை நீலகேசி 344 ஆம் பாட்டுரையில் ‘புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட வினைய வுடம்பு' என்னும் குண்டலகேசிச் செய்யுள் அடியை எடுத்துக் காட்டி, நாதகுத்தனார் வாக்கெனக் குறிப்பிடுவதனால் அறியலாம். (கீழ்க்காணும் மாதிரிச் செய்யுள் 3ஆவது காண்க.)

மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி மணிமேகலை என்பவளின் பெயரையே அக்காப்பியப் பெயராகச் சூட்டினமை போல, இக்காவியத் தலைவியின் பெயர் 'குண்டலகேசி' என்பதாதலின், இக் காப்பியத்திற்குக் குண்டலகேசி என்னும் பெயர் சூட்டப்பட்டது. குண்டலகேசி என்பவள் புத்தர் உயிர் வாழ்ந்திருந்த காலத்தில் வடநாட்டிலிருந்த ஒரு பெண் துறவி இப் பெண்மையின் வரலாறு பாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூலாகிய 'தேரிகாதையிலும்’ ‘தம்ம பாதா’, ‘அங்குத்தரநிகாயா' என்னும் நூலிலும், நீலகேசி என்னும் ஜைனத் தமிழ் நூல் (286 ஆம் செய்யுள்) உரையிலும் கூறப்பட்டிருக்கின்றது. குண்டலகேசியின் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு:-