பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

மலைமீதிருந்து உருட்டினான். அவை அவருக்குப் பெரிய ஊறு செய்ய வில்லையாயினும், காலில் சிறிது காயத்தையுண்டாக்கின. இதனை யறிந்த அவருடைய சீடர்கள் அவரை வெளியே செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். புத்தர், 'ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் ஆகாது', என்று சொல்லி, தம் வழக்கம்போல் வெளியே சென்றுவந்தார். பின்னர், தேவதத்தன், அரசகுமாரன் உதவியால், ‘நளாகிரி” என்றும், 'தனபாலன்' என்றும் பெயருள்ள மதம்பிடித்த யானையைக் கள்ளூட்டி வெறிகொள்ளச் செய்து, புத்தர் வீதிவழியே செல்லும்போது அவரைக் கொல்ல அதை ஏவினான். அவ்யானை புத்தரைக் கண்டபோது மதமும் வெறியும் தணியப்பெற்று அவரை வணங்கியது.

இவ்வாறு, தேவதத்தன் புத்தரைக் கொல்லச் சூழ்ச்சி செய்திருக்க, அஜாத சத்துரு, அரசனைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான். இதனை யறிந்த அரசன் தன் மகளுக்கு அரசாட்சியைக் கொடுத்துவிட்டுத் தான் அப்பதவியினின்றும் விலகிக் கொண்டான். ஆயினும், தேவதத்தன் அரசகுமாரனிடம் சென்று, அரசனைக் கொல்லும்படி வற்புறுத்தினான். அதனைக்கேட்டு, அஜாத சத்துரு அரசனைச் சிறைப்படுத்தி, காற்றோட்ட மில்லாத ‘பொதியறை'யில் அடைத்து, அரசியைத் தவிர ஒருவரும் அங்குச் செல்லக் கூடாதென்றும், ஒருவரும் அவனுக்கு உணவு கொடுக்கக் கூடாதென்றும் கட்டளையிட்டான். இவ்வாறு சிறைப்பட்ட விம்பசார அரசனுக்கு அவன் மனைவி அவனைக் காணச் செல்லும் போதெல்லாம் தனது உடையில் உணவை மறைத்துக் கொண்டு போய்க் கொடுத்து வந்தாள். இது கண்டறியப்பட்டபின், தனது தலையணியில் சிறிது உணவை மறைத்துக்கொண்டு, போனாள். இதுவுங் கண்டறியப் பட்டபோது, அந்த அரசி நீராடித் தன் உடம்பில் ‘சாதுர் மதுரம்’ என்னும் நால்வகை இனிப்பு வகைகளைப் பூசிக்கொண்டு அரசனிடம் சென்றாள். அரசன் அவள் உடம்பில் பூசப்பட்ட இனிப்பை நக்கி உண்டு உயிர் வாழ்ந்தான். இதுவும் கண்டுபிடிக்கப்பட்டு, அரசி விம்பசாரனைப் பார்க்கக் கூடாதென்று தடுக்கப்பட்டது. விம்பசாரன் மனம் கவலாமல் பொதியறையாகிய அச்சிறையில் உலாவிக் கொண்டிருந்தான். இதனையறிந்த அஜாத சத்துரு சில மயிர் வினைஞரை அனுப்பி, விம்பசாரனுடைய பாதத்தைக் கத்தியால் கீறியறுத்து, உப்பையும் புளித்த காடியையும் இட்டுக் கட்டுமாறு கூறினான். இக்கொடுஞ் செயலைச் செய்ய மனமற்றவராக இருந்தும்,