பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

பாலிமொழி தமிழ்நாட்டில் இடம் பெற்றிருந்தது என்றால், தமிழ்நாட்டுப் பௌத்தர்கள் அந்த மொழியைப் பேசிவந்தார்கள் என்று கருதக்கூடாது. பாலிமொழி ஒருபோதும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பொது மக்களால் பேசப்படவில்லை. ஆனால், பௌத்தக் குருமாரான தேரர்கள் பாலிமொழியில் இயற்றப்பட்ட தம் மதநூல்களைப் படித்து வந்தார்கள். பிராமணர்கள், தம் மதவிஷயங்களை அறியத் தமது ‘தெய்வமொழி'யான சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படிப்பதும், உலக நடவடிக்கையில் தமிழ், தெலுங்கு முதலான தாய் மொழிகளைக் கையாளுவதும் போல, பௌத்தப் பிக்ஷுக்களும் தம்முடைய மதநூல்களை மட்டும் பாலிமொழியில் கற்றும், உலக வழக்கில், தமிழ்நாட்டினைப் பொறுத்தமட்டில், தமிழ் மொழியைக் கையாண்டும் வந்தார்கள். இந்தப் பிக்ஷுக்கள் பொதுமக்களுக்குப் பாலிமொழி நூலிலிருந்து மத உண்மைகளைப் போதித்தபோது, சில பாலிமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன.

இவ்வாறே அர்த்தமாகதி என்னும் வேறு பாகத மொழிச் சொற்களும், சம்ஸ்கிருத மொழிச் சொற்களும், ஆருகத மதத்தவ ராகிய ஜைனர்களாலே தமிழில் கலந்துவிட்டன. ஆருகதரும் பௌத்தரும் தமிழை நன்கு கற்றவர். அதனோடு பாகத, சம்ஸ் கிருத மொழிகளையும் பயின்றவர். இதனை,

‘ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப் பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள்...'

என்று சமணரைப் பற்றித் திருஞானசம்பந்தர் திருவாலவாய்ப் பதிகத்தில் கூறியிருப்பதினாலும் அறியலாம்.

மாகதி என்னும் பாலிமொழிச் சொற்கள் சில தமிழில் கலந்துள்ளன என்பதைத் தக்கயாகப்பரணி உரையாசிரியர் கூறியதிலிருந்தும் உணரலாம். 410 ஆம் தாழிசை உரையில், ‘ஐயை - ஆரியை. இதன் பொருள் உயர்ந்தோளென்பது. ஆரியையாவது சங்கிருதம்; அஃது ஐயை யென்று பிராகிருதமாய்த் திரிந்தவாறு; மாகததென்னலுமாம்’ என்று எழுதி யிருப்பதைக் காண்க. அன்றியும் 485ஆம் தாழிசையுரையில் 'தளம் - ஏழு; இது பஞ்சமா ரூட பத்திர தளம்; இது மாகதம்' என எழுதி யிருப்பதையுங் காண்க.