பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

சாவகர்: பௌத்தரில் இல்லறத்தார்.

ஹேது: (ஏது) காரணம்.

165

இவையன்றியும், நாவா (கப்பல்), பக்கி (பறவை), பாடசாலை (பள்ளிக்கூடம்), நாவிகன் (கப்பலோட்டி), பதாகை (கொடி), நாயகன் (தலைவன்), தம்பூலம், (தாம்பூலம் - வெற்றிலை) முதலிய சொற்களும் பாலிமொழியிலிருந்து பௌத்தர் மூலமாகத் தமிழ் நாட்டில் வழங்கி யிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றன. பாகத, அஃதாவது பிராகிருத மொழிச் சொற்களுக்கும் சம்ஸ்கிருத மொழிச் சொற்களுக்கும் சிறு வேறுபாடுகள்தாம் உள்ளன. எனவே, இச்சொற்கள் சம்ஸ்கிருதத்தி லிருந்து வந்தனவா, பிரகிருத மொழிகளிலிருந்து வந்தனவா என்று முடிவுகட்ட இயலாது. ஆனால், தமிழ்நாட்டு வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், பௌத்தமதமும் சமணமதமும் முதலில் தமிழ்நாட்டில் சிறப்புற் றிருந்தனவென்பதும், பிறகுதான் வைதீகப் பார்ப்பனீயம் சிறப்புப் பெற்றதென்பதும் நன்கு விளங்கும். எனவே, பௌத்தரின் சமய மொழியாகிய மாகதி (பாலி), சமணரின் சமயமொழியாகிய அர்த்த மாகதி என்னும் இரண்டு பிராகிருத மொழிகளின் மூலமாகத்தான் பல திசைச் சொற்கள் தமிழில் கலந்திருக்க வேண்டும்.

பாலி, சிங்களம், தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் முதலிய மொழிகளைக் கற்றவரும் பௌத்தருமாகிய முதலியார் ஏ.டி.எஸ்.ஜி. புஞ்சிஹேவா அவர்கள் 26.10.1940இல் எமக்கு இலங்கையிலிருந்து எழுதிய கடிதத்தில் இதுபற்றி எழுதியிருப்பதை ஈண்டுக் குறிப்பிடுவது அமைவுடைத்து. அவர் எழுதியது இது:-

'பாலிச் சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் கலந்து வழங்கி வருவதைக் காணலாம். சமனல என்னும் சிங்களச் சொல் தமிழில் சமனொளி என்பதாகவும் வழங்கி வருகின்றது. பாலிச் சொற்கள், சம்ஸ்கிருத மொழிச் சொற்கள் என்ற எண்ணத்துடன் வழங்குவதாகவும் காணப்படும். உச்சரிக்கையில் ஏறக்குறைய சமமாயிருக்கும் ஒரு பொருட் சொற்கள் பாலிமொழியிலும் சம்ஸ்கிருத மொழியிலும் காணப் படுகின்றன. சம்ஸ்கிருதச் சொற்கள் எனப் படும் இச்சொற்கள் தமிழ் மொழியில் இருவிதமாக எழுதப்படுகின்றன. ஒருவிதம் பாலிமொழிக் கிணக்கமாகவுள்ளது; மற்றது சம்ஸ்கிருத மொழிக்கிணக்கமாகவுள்ளது. பாலிக்கிணக்கமுள்ள சொல் பாலி மொழியிலிருந்து வந்ததாகவும்