பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

இன்றைக்கும் காணப்படுவது தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்த மதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில் களில் உள்ள புத்த விக்கிரகங்களுக்குத் 'தருமராஜா' அல்லது தருமதாகூர்' என்று பெயர் வழங்கப்படுகின்ற தென்றும் அறிகின்றோம். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களா யிருந்திருக்க வேண்டும் என்று கருதப்படும்.

இவ்வாறே, தாராதேவி, மங்கலதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக் களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப் படுகின்றது. ‘தருமராஜா' என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, 'தாராதேவி' என்னும் பௌத்த அம்மன் கோயில், தரும ராஜாவின் மனைவியாகிய திரௌபதியின் கோயிலாக்கப்பட்டது போலும்.

சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் ‘வரதராசர் கோயில்', 'திருவரங்கர் கோயில்', 'வேங்கடேசர் கோயில்' முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் ‘கபாலீஸ்வரர் கோயில்', ‘தியாகராசர் கோயில்’, ‘சொக்கலிங்கர் கோயில்' முதலான வெவ்வேறு பெயர் களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் ‘தருமராசா கோயில்', 'சாத்தனார் கோயில்', 'முனீஸ்வரர் கோயில்' என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டு வந்தன என்றும், பிற்காலத்தில் இந்து மதம் செல்வாக்குப் பெற்றபோது அதை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராமதேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டன வென்றும் தோன்றுகிறது.