பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -8

தீர்க்கலாம் என்று எண்ணினான். அவ்வமயம் அவனைப் போலவே வடநாட்டினின்று தென்னாட்டிற்கு யாத்திரை வரும் ஒருவன், நீர் வேட்கை மிக்கவனாய், பருக நீர் கிடையாமல் வருந்தி, அதே மரத் தடியில் வந்து அமர்ந்தான். வந்தவன், முன்னவனைப் பார்த்து, 'ஐயா, எனது நீர் வேட்கை தீர ஒரு வெற்றிலையாவது கொடும்,' என்று இரந்து வேண்டினான். அதற்கு அவன், 'எனக்கும் நீர் வேட்கை மிகுதியா யிருக்கின்றது. என்னிடமுள்ளது. இந்த இரண்டு வெற்றிலைகளே; ஒன்றை உமக்குக் கொடுத்துவிட்டு யான் என் செய்வது?' என்று சொல்லி மறுத்தான். பின்னவன், ‘என்னிடம் காசு இருக்கிறது; தருகிறேன்; ஒரு வெற்றிலை தாரும்' என்று கேட்க, அதற்கும் அவன் மறுத்தான். பின்னர், பெருந்தொகை கொடுப்பதாகச் சொன்னபோது, அவன் அப் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு வெற்றிலையைக் கொடுத்தான். இருவரும் ஒவ் வொரு வெற்றிலையை மென்று ஒருவாறு நீர்வேட்கையைத் தீர்த்துக் கொண்டனர்.

பின்னர், இருவரும் புறப்பட்டு வெவ்வேறு வழியே சென்று, கடைசியாக ஒரு துறைமுகத்தை அடைந்து, மரக்கலம் ஏறிக் கப்பல் யாத்திரை புறப்பட்டனர். ஆனால், அக்கப்பலில் இருவரும் ஒருங்கே யாத்திரை செய்வது அவர்களுக்குத் தெரியாது. சில நாள் சென்றபின், நடுக்கடலில் புயல் அடிக்க, மரக்கலம் உடைந்து விட்டது. கப்பல் யாத்திரிகரில் சிலர் மூழ்கி இறந்தனர். சிலர் தம் உயிரைக் காக்கக் கடலில் நீந்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு நீந்தியவர்களில் வெற்றிலையைப் பெரும் பொருள் கொடுத்து வாங்கியவன் மரப்பலகையைப் பற்றிக் கொண்டு அதன் உதவியினால் நீந்திக்கொண்டிருந்தான். வெற்றிலையை விற்றவனோ யாதொரு பற்றுக்கோடுமின்றி அப்பெருங்கடலினைத் தன் வெறுங்கைகளால் நீந்தித் தவித்துக் கொண்டிருந்தான். அப்போது பலகையுள்ளவன் அவனைக் கண்டு, பெருந்தொகை பெற்றுக்கொண்ட போதிலும், தக்க நேரத்தில் ஒரு வெற்றிலையையாவது கொடுத்து உதவி செய்த அவனது நன்றியை நினைவுகூர்ந்து, தன்னிடமிருந்த ஒரே மரப் பலகையை அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வெறுங்கைகளால் நீந்தத் தொடங்கினான்.

அப்போது மணிமேகலை இவனது இரக்கமுள்ள மனப்பான் மையினையும், தன்னலமற்ற உதவியையுங் கண்டு மெச்சி, இத்தகைய நன்மகனைக் காப்பாற்ற வேண்டுவது தனது நீங்காக் கடமை எனக் கண்டு, அவன்மீது அருள் கூர்ந்து, அவன் கண்களுக்குத் தோன்றாமலே