பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

217

போது பிராகிருத பாஷைகளில் பிரசாரம் செய்யவில்லை. தமிழரின் தாய்மொழியாகிய தமிழிலே பேசிப் பிரசாரம் செய்தார். பௌத்த பிக்குகள் பௌத்த மதப் பிரசாரத்தை அந்தந்த நாட்டுத் தாய் மொழியிலே தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்பது பகவான் புத்தரின் கட்டளை. சமண சமய ஆச்சாரியர்களும் தங்கள் சமண சமயப் பிரசாரத்தை அந்த நாடுகளில் பேசப்படுகிற அந்தந்தப் பாஷைகளிலே தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்னும் கொள்கை யுடையவர்கள். ஆகவே, தாய்மொழி வாயிலாகச் சமயப் பிரசாரங்கள் நடந்த படியால், பௌத்த-சமண சமயங்கள் தமிழகத்தில் நன்றாகப் பரவிச் செழிப்படைந்தன.

பௌத்த பிக்குகளும் சமண முனிவர்களும் சமயப் பிரசார கர்கள். அவர்கள் செல்லும் ஊர்களிலெல்லாம் சமய போதனை செய்து கொண்டே இருந்தார்கள். பிராகிருத பாஷையிலுள்ள பௌத்த-சமண நூல்களைப் படித்துப் பிறகு தமிழில் போதித்தபடியால் பிராகிருத பாஷைச் சொற்கள் சில இயற்கையாகவே தமிழ் மொழியில் கலந்து விட்டன. பாகத (பிராகிருத) மொழிச் சொற்கள் பல தமிழ் இலக்கியங் களில் காணப்படுவதன் காரணம் இதுதான். இக்காலத்துச் சில ஆராய்ச்சிக்காரர்கள் இந்தப் பிராகிருத மொழிச் சொற்களைச் சமஸ்கிருத மொழிச் சொற்களின் திரிவு என்று கூறுகிறார்கள். இது தவறு. ஆதிகாலத்தில் பிராகிருத மொழிச் சொற்கள் நேரடியாகவே தமிழில் கலந்தன. அவை சமஸ்கிருத மொழிச் சொற்களின் திரிபு போலக் காணப்பட்டாலும் உண்மையில் அவை நேரடியாகத் தமிழில் கலந்த பிராகிருதச் சொற்கள் என்பதை சமய வரலாற்றுக் கண் கொண்டு பார்ப்பவருக்கு நன்கு விளங்கும். சமஸ்கிருத மொழிச் சொற்கள் தமிழில் வந்து கலந்தது பிற்காலத்திலாகும். அதுபற்றி இங்கு ஆராய்ச்சி இல்லை.

பௌத்த-சமண சமயங்கள் வருவதற்கு முன்பு தமிழகத்தில் ஊர்கள் தோறும் பாடசாலைகள் இருந்தன. கணக்காயர்கள் பாடசாலைகளில் பிள்ளைகளுக்குச் கல்வி கற்பித்து வந்தார்கள். பௌத்த-சமண சமயத்துத் துறவிகளும் தங்கள் பள்ளிகளில் ஊர்ச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினார்கள். பள்ளிகளில் (பௌத்த-சமண சமயக் கோவில்களில்) பாடசாலைகளை நடத்திய படியால் பாடசாலைகளுக்கும் பள்ளிக்கூடம் என்னும் பெயர் ஏற்பட்டது.