பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

227

கூறப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டளைப்படி தமிழ் நாட்டுக்கு வந்த பௌத்த பிக்குகள் தமிழ் மொழியிலேயே தமிழர்களுக்குப் பௌத்த சமயத்தைப் போதித்தார்கள். பௌத்த நூல்களைத் தமிழிலேயே எழுதினார்கள்.

பௌத்த பிக்குகள் தமிழ் நாட்டில் பௌத்த சமயக் கருத்துக்களைத் தமிழில் பரப்பியபோது பாலி மொழிச் சொற்கள் தமிழில் கலந்தன. பாலி என்னும் பிராகிருத மொழிக்கு மாகதி என்றும் பெயர் உண்டு. பாலி என்னும் மாகதி மொழி வடநாட்டில் பகவன் புத்தர் காலத்தில் பேசப்பட்டது. ஆகவே, பாலி மொழியில் கெளதம புத்தர் தம்முடைய அறவுரைகளைக் கூறினார். அவருடைய அறவுரைகள் பாலி மொழியில் எழுதப்பட்டன. அவற்றிற்குத் திரிபிடகம் என்பது பெயர். பௌத்தர் திரிபிடகத்தைத் தமிழில் உரைத்த போது, பாலி மொழிச் சொற்கள் சில தமிழில் கலந்தன. தமிழில் கலந்துள்ள சில பாலி மொழிச் சொற்களைக் கூறுவோம். இவை பௌத்த நூலாகிய மணிமேகலை, குண்டலகேசி முதலிய நூல்களில் காணப்படுகின்றன. அநித்தம், அனாத்மம், ஆராமம், கருணை, சமணன், சேதியம், சயித்தியம், சக்கரவாளம், சீலம், கந்தம், உபாசகர், சுகதன், தேரன், தேரி, துக்கம், பீடிகை, பாரமிதை, பிக்கு, பிக்குணி, தூபி, முதிதை, மைத்திரி, போதி, வேதிகை, விகாரை, நியமம் முதலியன. இங்குச் சிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டினோம். தமிழ் மொழியையும் மாகத (பாலி) மொழியையும் நன்கு கற்றவர் இந்தச் சொல் ஆராய்ச்சியில் ஈடுபடுவது விரும்பத் தக்கது.

மேலே காட்டப்பட்ட பாலி மொழிச் சொற்கள், வடமொழிச் சொற்கள் போலக் காணப்படுகிறபடியால், இவை வட மொழிச் சொற்களின் திரிபு என்று சிலர் கூறுவர். இப்படிக் கருதுவது தவறு. இவை பாலி மொழிச் சொற்களே. பிராகிருத மொழிச் சொற்கள் பௌத்த சமயத்தின் மூலமாகவும் சமண சமயத்தின் மூலமாகவும் முதன் முதலாகத் தமிழில் கலந்தன. அதற்குப் பின்னரே வட மொழிச் சொற்கள் தமிழில் கலக்கத் தொடங்கின. இது வரலாற்று முறைப்படி கிடைக்கிற சான்றாகும். ஆகவே, வரலாற்று முறைப்படி ஆராயாமல் கண்ணை மூடிக் கொண்டு பிராகிருத மொழிச் சொற்களையெல்லாம் வடமொழிச் சொற்கள் என்று கருதுவது தவறாகும்.

பௌத்த சமயக் கல்விப்பணி

பௌத்த சமயப் பிக்குகள் சமயப் பேருரை செய்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. சிற்றூர்ச் சிறுவர் சிறுமிகளைத் தங்கள்