பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திரிபிடக வரலாறு

பௌத்த வேதத்திற்குத் திரிபிடகம் என்பது பெயர். பாலி மொழியிலே இது திபிடகம் என்று கூறப்படும். திரிபிடகம் என்பதற்கு மூன்று கூடை என்பது பொருள். அஃதாவது மூன்று வகுப்பு என்பது பொருள். பிடகத்தைப் பிடக்கு என்று தேவாரம் கூறுகிறது. வட இந்தியாவிலே அக்காலத்தில் பெரும்பான்மையோர் வழங்கிவந்த அர்த்தமாகதி எனப்படும் பாலி மொழியிலே புத்தர் பெருமான் தம் கருத்துக்களை வெளியிட்டார். நாற்பத்தைந்து ஆண்டுகளாகப் புத்தர்பெருமான் தம் கொள்கைகளை நாடெங்கும் போதித்து வந்த போதிலும், அவர் அக்கொள்கைகளை நூல் வடிவமாக எழுதி வைக்க வில்லை. ஆனால், அவருடைய சீடர்கள், அவருடைய போதனை களை இரண்டு சம்ஹிதை (தொகுப்பு) களாகத் தொகுத்துப் பாராயணம் செய்து வந்தனர். அத்தொகுப்புகளில், பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுக வேண்டிய ஒழுக்கங்களைக் கூறுகிற விநயம் என்பது ஒன்று; தர்மம் (அறநெறி) என்பது மற்றொன்று.

புத்தர்பெருமான் நிர்வாணமோட்சம் அடைந்த சில திங்களுக்குப் பின்னர், மகதநாட்டுத் தலைநகரமான ராஜ கிருஹ நகரத்திற்கு அண்மையில் இருந்த ஸத்தபணி என்னும் மலைக் குகையிலே கார்காலத்தைக் கழிக்கும் பொருட்டு ஐந்நூறு தேரர்கள் (வயது முதிர்ந்த பிக்குகள்) ஒருங்கு கூடினார்கள். இதுவே பிக்கு சங்கத்தார் கூடிய முதல்மாநாடு ஆகும். புத்தருடைய முக்கிய சீடர்களில் ஒருவராகிய மகாகாசிபர் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். புத்தர்பெருமான் அருளிய விநய போதனைகளை அவருடைய மற்றொரு முக்கிய சீடராகிய உபாலி என்பவர் ஓதினார். இன்னொரு முக்கிய சீடராகிய ஆநந்தர், புத்தர் அருளிய தம்ம போதனைகளை தினார். இவ்வாறு, இந்த முதல் சங்கத்திலே விநயபிடகம், தம்ம (அபிதம்ம) பிடகம் என்னும் இரண்டு பிடகங்கள் மட்டும் தொகுக்கப்பட்டன. (சூத்திர பிடகம் என்னும் மூன்றாவது பிடகம், அபிதம்ம பிடகத்திலிருந்து பிற்காலத்தில் பிரித்துத் தொகுக்கப்பட்டது.) இவ்வாறு ஆதியில் இரண்டு பிடகங்களாக இருந்தவை பிற்காலத்