பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பௌத்த சமயம்*

பகவன் புத்தர் பரி நிர்வாணம் அடைந்த சில காலத்திற்குப் பிறகு பௌத்த மதத்தில் சில பிரிவுகள் தோன்றின. அந்தப் பிரிவுகளை ஹீனயான பௌத்தம், மஹாயான பௌத்தம் என்னும் இரண்டும் பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஹீனயான பௌத்தத்திற்குத் தேரவாத பௌத்தம் என்றும் அனாத்மவாத பௌத்தம் என்றும் பெயர்கள் உண்டு. இதுவே பழமையான பௌத்த மதம். மஹாயான பௌத்தம் பிற்காலத்தில் தோன்றியது.

இவ்விரண்டு வகையான பௌத்த மதங்களும் அவற்றின் பிரிவுகளும் பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலே இருந்தன. இப்போது தமிழ் நாட்டிலே பௌத்த மதம் முழுவதும் மறைந்து விட்டது. இலங்கை, பர்மா, சீனம், திபெத்து முதலிய தேசங்களிலே இன்றும் பௌத்த மதம்நிலை பெற்றிருக்கிறது.

தமிழ் மொழியிலே பௌத்த சமய நூல்கள் பல இருந்தன. அவை யெல்லாம் சமயப் பகை காரணமாகப் பிற்காலத்திலே அழிக்கப்பட்டன. இப்போது தமிழில் எஞ்சியுள்ள பௌத்த காவியம் மணிமேகலை ஒன்று தான். மணிமேகலையிலே தேரவாத பௌத்தம் (அனாத்மவாத பௌத்தம்) கூறப்படுகிறது. ஆகவே, தேரவாத பௌத்தக் கொள்கை (தேரவாத தத்துவம்) என்ன என்பதை இங்கு விளக்குவோம்.

பௌத்த மதத்தில் இல்லறம் துறவறம் என்னும் இரண்டு அறங்களே உள்ளன. இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள் மும்மணி களை வணங்கிப் பஞ்சசீலங்களைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். னால், இல்லறத்தார் பிறவா நிலையாகிய நிர்வாண மோக்ஷம் அடைய முடியாது. துறவறத்தில் நின்றவர் மும்மணிகளை வணங்கிப் பத்து வகைக் சீலங்களை மேற்கொண்டு, நான்கு வாய்மைகளைக் கடைப்பிடித்து, அஷ்டாங்க மார்க்கத்தில் ஒழுகி, ஞானம் யோகம் ஆனாபான ஸ்மிருதி முதலியவைகளைச் செய்வார்களானால், பிறவா நிலையாகிய பேரின்மாகிய நிர்வாண மோக்ஷத்தைப் பெறக்கூடும்.

  • மதுரைத் தமிழ்ச் சங்க பொன்விழா மலர். (1956)