பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

எவ்வாறு மக்களிடையில் இடம் பெறும். மாமிசம் உண்பதையும் பலியிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்த மக்கள், தமக்கு முரண்பட்ட பௌத்த சமண மதக் கொள்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? காதலைச் சிறப்பாகப் போற்றியவர்கள் துறவற வாழ்க்கைக்கு எவ்வாறு முதன்மையளிப்பார்கள்? பௌத்த சமண சமயக் கொள்கைகள் பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்படாமற் போகவே, அந்த மதக் கொள்கைகள் அக்கால இலக்கியத்தில் முதலிடம் பெறவில்லை.

னால், பௌத்தர்களும் சமணர்களும் தங்கள் பிரசார வேலையை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். சிறிது சிறிதாகத் தங்களுடைய கொள்கையை நாட்டில் பரப்பினார்கள். கி.பி. முதல் நூற்றாண்டில் அவர்கள் செல்வாக்கையடைந்தார்கள். சமண, பௌத்த சமயங்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலே மக்களின் ஆதரவைப் பெற்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலே, கோவலன் வரலாறும், மணிமேகலை வரலாறும் சமண, பௌத்தர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பையளித்தன. கோவலன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, தமிழர் மரபையும் பண்பாட்டையும் சுற்றுச்சார்பாக அமைத்து, இடையிடையே சமண சமயக் கொள்கையைப் புகுத்தி, இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தை இயற்றினார். கோவலன் மகள் மணிமேகலையின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழரின் மரபையும் பண்பாட்டையும் சுற்றுச்சார்பாக அமைத்து இடையிடையே பௌத்த மதத்திற்கு ஏற்றந் தந்து, சீத்தலைத் சாத்தனார் மணிமேகலை என்றும் காவியத்தை இயற்றினார். இந்தக் காவியங்களை இயற்றியவர்கள் தமிழ் நாட்டுச் சமண, பௌத்த சமயத்தவர்களே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழ் மொழியில் இயற்றப்பட்ட ஆதிகாவியங்களாகும். இக்காவியங்கள் இயற்றப்படுவதற்கு முன்பு இயற்றப்பட்ட இலக்கியங்கள் சிறுசிறு தனிப்பாடல்களாக அமைந்தவை. சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் தொடர்நிலைச் செய்யுள்கள் இயற்றப்படுவதற்கு முன்பு, வேறு தொடர்நிலைச் செய்யுள்கள் தமிழில் இருந்ததாகத் தெரியவில்லை.

கி.பி. 2ஆம் நூற்றாண்டிலே சிலப்பதிகாரம், மணிமேகலை காவியங்கள் தோன்றிய பிறகு, உடனே அகப் பொருள், புறப்பொருள் இலக்கியங்கள் மறைந்து விடவில்லை. அவையும் இருந்து வந்தன.

போரிலே புறப்பகையை வென்று வெற்றி பெற்று வீரனாக விளங்குவதை விடக் கொல்லா அறத்தை மேற் கொண்டு மனத்தில்