பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பௌத்தமதத் தத்துவம்

“பேதைமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை

பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்

இற்றென வகுத்த இயல்பீ ராறும்

பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர்

அறியார் ஆயின் ஆழ்நர கறிகுவர்.

(24-ஆம் காதை 105-110. 30ஆம் காதை 45-50)

(மணிமேகலை)

பௌத்தமதத் தத்துவம் பன்னிரண்டு நிதானங்களையுடையது. (நிதானம் = காரணம்) பன்னிரண்டு நிதானங்களைத் தமிழில் பன்னிரு சார்பு என்பர். அவையாவன;

1. அவிஜ்ஜை, 2. ஸங்க்காரம், 3. விஞ்ஞானம், 4. நாமரூபம், 5. ஸ்ளாயதனா, 6. பஸ்ஸ, 7. வேதனா, 8. தண்ஹா, 9. உபாதானம், 10. பவம், 11. ஜாதி, 12. ஜராமரணம்.

பாலிமொழிப் பெயர்களாகிய இவற்றைச் சீத்தலைச் சாத்தனார் தமது மணிமேகலை என்னும் நூலிலே கீழ்க்கண்டவாறு தமிழ்ப் பெயரால் கூறுகிறார்:-

1. பேதைமை, 2. செய்கை, 3. உணர்வு, 4. அருவுரு, 5. வாயில், 6. ஊறு, 7. நுகர்வு, 8. வேட்கை, 9. பற்று, 10. பவம், 11. தோற்றம்,

12. வினைப்பயன்.

இப் பன்னிரு சார்புகளின் தன்மைகளைச் சாத்தனார் மணிமேகலை 30ஆம் காதையில் விளக்கியுள்ளார். இச் சார்பு களினாலே பிறப்பு இறப்பு உண்டாகின்றன. சார்புகளை அறுத்தால், பிறப்பு இறப்பு நீங்கி நிர்வாண மோட்சம் எனப்படும் வீடு பேற்றினை அடையலாம். இவற்றைப் பாலி மொழியில் உள்ள பிடக நூல்களில் கூறி யுள்ளபடியே சாத்தனார் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார். விநய பிடகத்தின் மகாவக்கம் என்னும் பிரிவில் முதல் காண்டத்தில் கீழ்க்காணும்படி கூறப்பட்டுள்ளது: