பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

6

53

கி.பி. ஏழாம் நூற்றாண்டில், இந்தப் புதிய வைதீக இந்து மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போர் தொடங்கி வெற்றிபெற்றது. இந்து மதத்தின் வெற்றிக்குக் காரணம் யாதெனின், அக்காலத்தில் இந்து மதம் பிரிவினையின்றி ஒரே மதமாக இருந்ததேயாம். திருமால், சிவன் என்னும் இருதேவர் அதில் இருந்தபோதிலும், வைணவ மதம் என்றும் சைவமதம் என்றும் பிற்காலத்துப் பிரிந்து நின்றதுபோல, அக்காலத்தில் இந்து மதம் பிரிந்திருக்கவில்லை. புதிய வைதீக மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போராடிய காலத்தில், வைணவம் சைவம் என்றும், வடகலை தென்கலை என்றும், வீர சைவம் சித்தாந்த சைவம் என்றும், ஸ்மார்த்த மதம் என்றும் பல பகுதிகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆகவே ஒற்றுமையுடன் போரிட்டபடியால், ஜைன பெளத்த மதங்களை அது வீழ்ச்சியடையச் செய்துவிட்டது; தமிழ்நாட்டில் ஜைன மதம் என்றும் தலைதூக்க முடியாதபடியும் ஏற்கெனவே ஜைனமதத்தால் வலிமை குன்றியிருந்த பௌத்த மதம் அடியோடு ஒழியும்படியும் இதனால் நேர்ந்தது. சாத்த மங்கை முதலிய இடங்களில் சம்பந்தர் பௌத்தருடன் வாதப் போர் செய்து அவர்களைத் தோற்பித்துச் சைவராக்கிய வரலாறும், மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பௌத்தருடன் வாதம் செய்து அவரை இலங்கைக்குத் துரத்திய வரலாறும், திருமங்கை யாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலிருந்த பொன்னால் அமைந்த புத்தச் சிலையைக் கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக் கொண்டு திருவரங்கத்தில் திருப்பணி செய்த வரலாறும் பௌத்த மதத்தின் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.

கலிகால சாகித்ய பண்டித பராக்கிரம பாகு என்னும் இலங்கை மன்னன், கி.பி. 1266 இல் சோளி (சோழ) தேசத்திலிருந்து பௌத்த பிக்ஷுக்களை இலங்கைக்கு வரவழைத்துப் பௌத்த மதத்தை வலியுறச் செய்தான் என்று இலங்கைச் சரித்திரத்தினால் அறியப் படுகின்றதாகலின், கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் சோழ தேசத்தில் பௌத்த மதம் நிலைபெற்றிருந்தது என்று துணியலாம். கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டின் சிற்சில இடங்களில் பௌத்தரும் பௌத்தப் பள்ளிகளும் இருந்துவந்தன. பின்னர், நாளடைவில், பௌத்தம் தமிழ்நாட்டில் மறைந்துவிட்டது; மறக்கவும் பட்டது. ஆனால் அதன் பெரிய கொள்கைகள் மட்டும் பல இன்னும் இந்துமதத்தில் போற்றப்பட்டு வருகின்றன.