பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பௌத்த திருப்பதிகள்

தமிழ்நாட்டிலே பண்டைக்காலத்திலே பெளத்த மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது என்பதை அறிந்தோம். பொதுவாகத் தமிழ்நாட்டில் சிறப்புப் பெற்றிருந்ததென்றாலும், சிறப்பாக எந்தெந்த நகரங்களிலும் ஊர்களிலும் செல்வாக் குற்றிருந்தது என்பதை ஈண்டு ஆராய்வோம். முதலில் சோழநாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகளைக் கூறுவோம்.

காவிரிப்பூம்பட்டினம்:

சோழநாட்டில் பேர்பெற்ற துறைமுகப் பட்டினமும் சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றுமான காவிரிப்பூம்பட்டினம் பண்டைக்கால முதல் பௌத்தர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அவ்வாற்றின் வடகரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகப் பட்டினம் புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. பாலி மொழியில் உள்ள பௌத்த நூல்களில் இப்பட்டினம் ‘கவீர பட்டினம்’ என்று கூறப்பட்டுள்ளது. மிகப் பழமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் இந்த நகரம் டமிள (தமிழ) தேசத்தில் உள்ளதென்றும், அகத்தி அல்லது அகித்தி என்னும் முனிவர் தமது பெருஞ் செல்வத்தைத் தானஞ் செய்துவிட்டுத் துறவு பூண்டு காவிரிப் பூம்பட்டினத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கித் தவம் செய்தாரென்றும், அப் பெரியாரைக் கண்டு வணங்கப் பெருந்திரளான மக்கள் அங்குச் சென்று வந்ததால் அவரது தவத்துக்கு இடையூறா யிருந்தது பற்றி அவர் அவ்விடத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கருகில் உள்ள காரைத் தீவிற்குச் சென்று தவம் புரிந்தாரென்றும் கூறப்பட்டிருக் கின்றது. இந்த அகத்தி, அல்லது அகித்தி என்பவர் பௌத்த முனிவர்களில் ஒருவர்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியின் உறவினரான மகிந்தர், (மகேந்திரர்) என்பவர் இலங்கைக்குச் சென்று அங்குப் பௌத்தமதத்தைப் பரப்புவதற்கு முன், சோழ நாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் தங்கி அங்கு ஏழு புத்த விகாரைகளைக் கட்டினா ரென்றும், மணிமேகலை சிலப்பதிகார நூல்களில் கூறப்படுகின்ற