பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -8

வெண்ணி நகரத்துக்கு அடுத்துப் பூதமங்கலம் என்னும் ஊர் ஒன்று சோழநாட்டில் இருந்த செய்தி சாசனங்களால் தெரியவருகிறது. 1

தஞ்சை ஜில்லா மன்னார்குடி தாலுகா திருவிராமேச்சரம் என்னும் பாடல்பெற்ற கோயிலில் உள்ள ஒரு சாசனம், தென்மலி நாட்டு மேற்பூத மங்கலம் என்னும் நாட்டையும் அங்கிருந்த ஊர்க்காட்டுப் பகவதேவர் கோயிலையும் குறிப்பிடுகின்றது.2 இதிலிருந்து பூதமங்கலம், மேற்பூத மங்கலம் கீழ்ப்பூதமங்கலம் என்று இருகூறாகப் பிரிக்கப்பட்டிருந்த செய்தி தெரிகிறது. அன்றியும், பகவதேவர் கோயில் என்பது புத்தர் கோயிலாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது. புத்தருக்குப் பகவன் என்னும் பெயரும் உண்டு. மேற்கூறிய இரண்டு சாசனங்களிலும் காணப்படுகிற ஊர்தான் புத்த தத்தர் இருந்த பூதமங்கலம் ஆகும்.

திரு. மீனாட்சியம்மையாரும், இந்த ஊரைத்தான் புத்த தத்தர் குறிப்பிடுகிற பூதமங்கலம் என்று கூறுகிறார். இவர் தாம் நேரில் அவ் வூருக்குச் சென்று தாம் கண்ட செய்திகளைக் கூறுகிறார். இவர் கூறுவதாவது: ஆசாரிய புத்ததத்தர் இருந்த பூதமங்கலம் வெண்ணிக் கூற்றத்து வெண்ணி நகரைச் சேர்ந்த பூதமங்கலம் ஆகும். தஞ்சாவூருக்குக் கிழக்கே 20 மைலுக்கப்பால் உள்ளதும், இப்போது கோயில் வெண்ணி என்று வழங்கப்படுகிறதும் ஆன இடம் தான் அது. இது மன்னார்குடி தாலுகாவில் இருக்கிறது. இப்போது, பூதமங்கலம் சிறு கிராமமாக இருக்கிறது. இதற்கடுத்துள்ள கிராமம் பள்ளிவிருத்தி என்று வழங்கப்படுகிறது. பள்ளிவிருத்தி என்பது பௌத்தப்பள்ளிக்காக விடப் பட்ட மானியம் என்று பொருள்படும். இப்போதுள்ள பூத மங்கலம், பள்ளிவிருத்தி என்னும் கிராமங்கள் பண்டைக்காலத்தில் பெரிய பட்டணமாக இருந்திருக்கவேண்டும். பூதமங்கலத் தில் செங்கற்களால் கட்டப்பட்டு அழிந்துபட்டுள்ள இரண்டு மேடுகளும், பள்ளிவிருத்தி கிராமத்தில் அவ்வாறே அழிந்து காணப்படுகிற மூன்று மேடுகளும் காணப்படுகின்றன. இந்த மேடுகளைத் தோண்டிப் பார்த்தால், இவற்றால் பௌத்த சின்னங்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும். இங்கு ஒரு புத்தர் உருவச் சிலையிருந்ததென்றும், அதைத் தஞ்சாவூருக்குக் கொண்டு போய்விட்டதாகவும் கூறுகிறார்கள். இவ்வூருக்கு அருகில் உள்ள மன்னார்குடியில் இருக்கிற ஜைனக் கோயிலில் புத்தர் உருவச் சிலையொன்று காணப்படுகிறது.3

"