பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

பல்லாவரம்:

73

பல்லவபுரம் என்பதன் திரிபு இப்பெயர். காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்கே 3 மைலுக்கப்பால் இருக்கிறது. இவ்வூரில், காஞ்சிபுரத்தை அரசாண்ட பல்லவ அரசகுடும்பத்தார் வாழ்ந்திருந்தார்கள். ஆகையால், இவ்வூர் இப்பெயர் பெற்றது. இப்போது இது சிறு கிராமமாக இருக்கிறது. பல்லவர் காலத்தில் இவ்வூர் சிறப்புற்றிருக்கவேண்டும். இவ்வூரில், முதலாவது மகேந்திரவர்மன் கற்பாறையைக் குடைந்து அமைத்த குகைக் கோயில் ஒன்று இருக்கிறது. 15.07.46இல் இவ்வூருக்குச் சென்றிருந்த போது இவ்வூருக்கு அண்மையில் உள்ள கணிகிலுப்பை என்னும் ஊரில் புத்தர் உருவச்சிலையொன்றை ஏரிக்கரையில் கண்டேன். இவ் வுருவம், ஏரிக்கரைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, அவ்வூர் விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்தது. விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், இந்தப் புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல், இருக்கிறது. அவ்வூர்த் தெருவின் எதிர்கோடியில் பௌத்தர்களுடைய தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது. புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டி யிருக்கிறார்கள். பிறகு, புத்த விக்கிரகத்தை ஏரிக்கரையில் கொண்டுபோய்ப் போட்டு விட்டார்கள். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை, பிற் காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டன என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பல்லவ அரச குடும்பம் இருந்த இவ்வூரில் புத்தர் ஆலயம் இருந்தது வியப்பன்று. ஏனென்றால், பல்லவ குடும்பத்தில் ஒரு பிரிவினர் பௌத்தர்களாக இருந்தனர். புத்தவர்மன் என்னும் பெயரைச் சூடிய பல்லவ அரசர்கள் சாசனங்களில் குறிக்கப்பட் டுள்ளனர். இங்குள்ள புத்த விக்கிரகமும், தர்மச்சக்கரக் கல்லும் இவ்வூரில் புத்தர் கோயில் இருந்ததை வலியுறுத்துகின்றன.

மாங்காடு:

செங்கல்பட்டு ஜில்லா, சைதாப்பேட்டை தாலுகா பூந்தமல்லிக்கு அருகில் இருக்கிறது இக்கிராமம். இவ்வூர் வெள்ளீசுவரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனம் ஒன்று, திரிபுவன சக்கரவர்த்தி கோனே ரின்மை கொண்டான் சுந்தர பாண்டிய தேவர் I (1251–64) காலத்தில், அவரது 5ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், இங்கிருந்த பள்ளிக்கு (புத்தர் கோயில்) மாங்காடு கிராமம், பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப் பட்டதென்று எழுதப்பட்டுள்ளது. 23