பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

பெயருடைய நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திர யான பௌத்த மதத்தவராகிய வச்சிரபோதி (கி.பி. 661-730) என்பவர் பிறந்தார். சீன தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் சென் பௌத்த (Zen Buddhism) மதத்தைப் பரப்பியவர் இவரே.

தஞ்சை:

பாண்டிநாட்டில் இருந்த தஞ்சாவூர். இந்த ஊரில் வாணன் என்னும் சிற்றரசன் ஒருவன்மீது இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவை என்னும் ஒரு நூல் தமிழில் உண்டு. பாலி மொழியில் பதினான்கு நூல்களை இயற்றிய பேர்பெற்ற பௌத்த பிக்ஷுவாகிய ஆசாரிய தர்மபாலர் இந்த ஊரில் பிறந்தார். இந்த ஊரிலும் பௌத்தர்கள் இருந்தனர் எனத் தெரிகிறது.

திருமாலிருஞ்சோலை:

‘அழகர்மலை’ என்று வேறு பெயருள்ள இந்த இடம் இப்போது வணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. இங்கு உள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரில் உள்ள குளம் ஆராமத்துக் குளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆராமம் என்பது சங்காரமம். அஃதாவது பௌத்த பிக்ஷுக்கள் வசிக்கும் இடம். அன்றியும், இக்கோயிலின் பழைய ஸ்தல விருக்ஷம் போதி (அரச) மரம் என்று கூறப்படுகிறது. இக்குறிப்புக்கள் யாவும், இது பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்த தென்பதைக் காட்டுகின்றன.

தென்கரை:

திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்குப் புத்தர் உருவச்

சிலையொன்று இருக்கிறது.

24

ஆசாரிய தம்மபாலர், வச்சிரபோதி, தம்மகீர்த்தி முதலிய பௌத்தப் பெரியார்கள் பாண்டிய தேசத்தில் இருந்தவர் ஆவர். பாண்டியதேசம், பாலி மொழியில் தம்பராட்டா (தாம்பிரபரணி தேசம்) என்று கூறப்படுகிறது. பாண்டியநாட்டில், பாண்டவ மலைகளும் அவற்றில் பிராமி எழுத்துக் களும் அதிகமாகக் காணப் படுகின்றன. ஜைனமதத்திற்கு முன்பு, பௌத்த மதம் பாண்டிய நாட்டில் சிறப்புற்றிருந்தது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள.