பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -8

"மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்மிகுந்தே ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால்

பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண் டேதமில்சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்.

-

99

(பெரியபுராணம் திருஞானசம்பந்தர் - 18)

இவ்வாறு அக்காலத்திலே, தமிழ்நாடு முழுவதும், பௌத்தமும் சமணமும் பரவிப் பெருகியிருந்ததாகச் சேக்கிழார் கூறுவது வெற்றுரையன்று: உண்மையே, மூவர் தேவாரத்தையும் தேவாரம் பெற்ற திருப்பதிகளின் வரலாற்றையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால், பௌத்தமும் சமணமும் ஒவ்வொரு ஊரிலும் பரவியிருந்த செய்தியை யறியலாம். இந்த முறையில், நான் ஆராய்ந்து பார்த்தவரையில், தேவாரம் பெற்ற திருப்பதிகளி லெல்லாம் மூவர் காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் பௌத்த மதமும் சமண சமயமும் சிறப்புற்றிருந்த செய்தியைக் கண்டேன். ஆராய்ச்சி மனப்பான்மையுடையோர், தேவாரம் பெற்ற திருப்பதிகளின் சமய வரலாற்றை இக்கண்கொண்டு ஆராய்ந்து உண்மை காண்பாராக.

இனி, தமிழ்நாட்டிலே ஆங்காங்குக் காணப்படுகிற பஞ்ச பாண்டவ மலை அல்லது பாண்டவக் குன்று என்பனவற்றில் பெரும்பாலான, பண்டைக்காலத்திலே பௌத்த பிக்குகள் வசித்துவந்த மலைகள் என்பதை விளக்குவாம். தமிழ்நாட்டில் மட்டுமன்று, ஆந்திரநாட்டிலும் இத்தகைய பாண்டவர் குன்றுகள் உள்ளன. ஆதியில், பௌத்த பிக்குகள் வசித்துவந்த இக்குகைகள், பௌத்தமதம் செல்வாக்கிழந்த பிறகு ஜைனர்களால் கைப்பற்றப்பட்டு, இவைகளில் சமணத் துறவிகள் வசித்து வந்தார்கள். பிற்காலத்திலே, சமணசமயமும் வீழ்ச்சியடைந்த பிறகு இக்குகைகள் “இந்து” சமயத்தவரால் கைப்பற்றப்பட்டு இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டன. இந்துக்கள் இக்குகைகளைக் கைப் பற்றிய பிறகு, இக்குகைகளில் பாரதக் கதையில் கூறப்படுகிற பஞ்ச பாண்டவர் வனவாசம் செய்த காலத்தில் தங்கி வசித்ததாகக் கதைகள் கற்பிக்கப்பட்டு, இன்றளவும் பாமரர்களால் நம்பப்பட்டு வருகின்றன. பண்டவமலை அல்லது பண்டவகுன்று என்பது பழைய பெயர். பிற்காலத்தில், இப்பெயருடன் பஞ்சம் என்னும் அடைமொழி சேர்த்துப் பஞ்சபாண்டவமலை என்று வழங்கப்படுகின்றன. உண்மையில் பஞ்ச பாண்டவர்களுக்கும் இக்குகைகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பௌத்த பிக்குகள் வசித்துத் தவம் செய்த குகைகளாகும்