பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

79

இவை. பௌத்தர்கள் ஏன் இக்குகைகளுக்குப் பண்டவமலை என்று பெயரிட்டார்கள் என்பதன் காரணத்தைக் கூறுவாம்.

பிற்காலத்திலே, புத்தர் பெருமானாகத் திகழ்ந்த சித்தார்த்த குமரன், அரசையும், அரசபோகத்தையும் துறந்து துறவுபூண்ட உடனே, மகத நாட்டின் தலைநகரான ராஜகிருகம் என்னும் நகரத்திற்கு வந்து, நகரத்தில் பிச்சை ஏற்றார். அக்காலத்தில், அந் நாட்டையாண்ட அரசன் பிம்பிசாரன் என்பவன். அவ்வரசனிடம் ஒற்றர்கள் சென்று, கண்ணைக் கவரும் உருவமைந்த ஒரு பிக்கு நகரத்தில் பிச்சை ஏற்பதை அறிவித்தார்கள். அரசன் அவர்களை அனுப்பி அவர் எங்கே செல்கிறார்; என்ன செய்கிறார் என்பதைக் கண்டறியும்படி ஏவினான். பிச்சை ஏற்ற சித்தார்த்தர், அந் நகரத்தைச் சுற்றிலுமிருந்த ஐந்து மலைகளில் ஒன்றாகிய பண்டவ மலை அல்லது பண்டவப் பதம் என்னும் குன்றின் அடிவாரத்தில் சென்று தாம் பிச்சை ஏற்ற உணவை உட்கொள்ளத் தொடங் கினார். அரண்மனையிலே இனிய உணவுகளை உண்டு பழகிய அவருக்கு, பிச்சையால் கிடைத்த உணவை உண்பதற்கு மனம் இடந்தரவில்லை; வாய் குமட்டியது. ஆனாலும், தாம் துறவு பூண்டபடியால் இத்தகைய உணவைத்தான் உண்ண வேண்டும் என்று உறுதிகொண்டு, மனம் பொறுத்துக் கொண்டு அதனை உண்டார். இவற்றையெல்லாம் ஒற்றரால் அறிந்த பிம்பிசார அரசன் அவர் இன்னார் என்பதையறிந்து அவரை அழைத்துத் தமது அரசாட்சியில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுப்பதாகவும், துறவறத்தை விட்டு விடும்படியும் கூறினான். அதற்குச் சித்தார்த்தர் இணங்காமல் காட்டிற்குச் சென்றுவிட்டார்.

இந்தச் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டவை தான் நமது நாட்டில் உள்ள பண்டவமலைகள். சித்தார்த்தராகிய புத்தர் பெருமான், தமது துறவற வாழ்க்கையில் முதல்முதல் தங்கிய மலை பண்டவமலை. (பண்டு - வெண்மை) ஆகவே, அவரைப் பின்பற்றி வந்த பௌத்த பிக்குகள் தாம் வசித்த மலைகளுக்கும் மலைக் குன்றுகளுக்கும் பண்டவமலை அல்லது பண்டவகுன்று என்று பெயர் சூட்டியதில் வியப்பொன்றுமில்லை. என்னை? அந்தந்தச் சமயத்தவர் தத்தம் சமயச் சார்பான பெயர்களைத் தத்தம் இடங்களுக்குச் சூட்டுவது வழக்க மாதலால் என்க. பௌத்த பிக்குகள், புத்தர் பெருமானுடைய மரபைப் பின்பற்றி வருவது இன்றும் காணலாம். உதாரணமாக, பௌத்தர் துறவு பூண்பதற்கு முன்னாள், தம்தம் அரசகுமாரனைப் போன்று போக