பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 8

தங்கியிருந்தபோது புத்தரை மாரன் என்னும் தேவன் அச்சுறுத்தினான்; புத்தர் அஞ்சாமல் வீற்றிருந்தார். மாரன் வெட்கி ஓடினான். புத்தர் இந்த மலையடி வாரத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, அவரைக் கொல்லுவதற்காகத் தேவதத்தன் என்பவன் இம்மலையுச்சியிலிருந்து பெரும்பாறையை யுருட்டி வீழ்த்தினான். அப்பாறை இவர்மேல் படவில்லை. ஆனால், சிறு கல் சிதறி வந்து இவரைக் காயப்படுத்தியது. அன்றியும், இந்தக் கிஜ்ஜகூட மலையில் இருந்தபோதுதான், ஜீவகன் என்னும் மருத்துவன் புத்தருக்குப் பேதி மருந்து கொடுத்து அவரது உடல் நலத்தைக் காத்தான். புத்தர் இந்த மலையில் இருந்தபோதுதான் சம்பாதி என்னும் பிரமனும், சக்கன் எனப்படும் இந்திரனும், அவன் பாணனாகிய பஞ்சசிகாவும், இந்தன் என்னும் இயக்கனும், சாதுர்மகா ராஜிகர்களும் புத்தரிடம் வந்து அவரை வணங்கிச் சென்றார்கள்.

இந்தக் கிஜ்ஜகூட மலையில் புத்தர் இருந்தபோதுதான் மாகன் என்பவன் பொருட்டு மாக சூத்திரத்தையும், அபயராஜ குமாரன் பொருட்டு அபய சூத்திரம் எனப்படும் கிஜ்ஜகூட சூத்திரத்தையும், தம்மிகன் பொருட்டுத் தம்மிக சூத்திரத்தையும் அருளிச் செய்தார். புத்தருடைய முக்கிய சீடர்களாகிய சாரிபுத்தர், ஆநந்தர், மகாகஸ்ஸபர், அநுருத்தர், புன்ன, உபாலி, சந்த, சன்ன, மொக்கல்லானர் முதலானவர் களும் இந்தக் கிஜ்ஜகூடம் என்னும் கழுகுமலையில் சிலகாலம் வசித்து வந்தார்கள். ஆகவே, இவ்வளவு சிறப்புடையதான கழுகுமலையின் பெயரைப் பௌத்தப் பிக்குகள் தாம் வசித்த மலைகளுக்குச் சூட்டி வழங்கியது வியப்பு அன்று.

செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள திருக்கழுக்குன்றம் என்னும் மலை ஆதிகாலத்தில் பௌத்தப் பிக்குகள் வசித்த இடம் என்று தோன்றுகிறது. மதுரை ஜில்லா மதுரை தாலுகாவில் மாங்குளம் என்னும் கிராமத்தில் கழுகுமலை என்னும் குன்றுகள் உள்ளன. இக்குன்றுகளில் நான்கு குகைகள் உள்ளன. குகைகளில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன.38 திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கழுகுமலை உண்டு.

கிஜ்ஜகூடம் என்னும் கழுகுமலைகள் ஆந்திரநாட்டிலும் உள்ளன. அவை முற்காலத்தில் பௌத்தர்களின் இடமாக இருந் தன என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்களில் பௌத்தச் சார்பான சான்றுகள் காணப்படுகின்றன. ஆராய்ச்சி மனப்பான்மையுடையோர் அவைகளை ஆராய்ந்து காண்பார்களாக.