பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பௌத்தரும் தமிழும்

வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமண மதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். 'சிரமணம்' என்னும் சொல் தமிழில் ‘சமணம்' என வழங்கும். 'சமண மதம்' என்றால், ஜைன மதத்துக்கு மட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப் படுகிறது. ஆனால் ‘சமணம்” என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்த ஜைனமதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக்காலத்தில் வழங்கிவந்தது.

சமணர்களாகிய பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் அறிய வேண்டும் என்னும் விரிந்த மனப்பான்மை உடையவர்கள். ஆகையால், அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய்மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும் வந்தார்கள். பிராமணர்களோ அத்தகைய விரிந்த மனப் பான்மை உடையவர்களல்லர். அதற்கு மாறாகத் தமது மதத்தைத் தாங்கள் மட்டும் அறியவேண்டும் என்னும் குறுகிய எண்ண முடையவர்கள். பொது மக்கள் அறியாத சமஸ்கிருத மொழியில் தங்கள் மதக் கொள்கைகளை எழுதி வைத்துக் கொண்டதோடு, அந்த நூல்களைப் பிராமணரல்லாதவர்கள் படிக்கவும் கூடாது. பிறர் படிப்பதைக் காதால் கேட்கவும் கூடாது, அப்படிச் செய்வராயின், அவரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று சட்டமும் எழுதி வைத்துள்ளார்கள்.

பரந்த உயர்ந்த பெரிய நோக்கமும், மனப்பான்மையும் கொண்ட வர்களான பௌத்த ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை எல்லோரும் அறியவேண்டும் என்னும் நல்லெண்ண முடையவர்க ளாதலின், அவர்கள் தங்கள் மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய் மொழிகளில் மொழிபெயர்த்து வைத்தார்கள். நாட்டுமக்கள் அறியாதபடி வேறொரு மொழியில் மதக் கொள்கைகளை மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத பெரும்பாவம் என்பது அவர்களின்