பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

123

கொண்டே ஒரு நாளைக்கு ஒரு யோசனை தூரம் நடந்து சென்றார். இரண்டு திங்கள் நடந்து வைசாக பௌர்ணமி நாளிலே கபிலவத்து நகரத்தையடைந்தார். உதாயிதேரர் முன்னதாகச் சென்று இவர் வருகையைச் சுத்தோதன அரசருக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்தார். அவர்கள் இவர் வரவை எதிர்பார்த்து, இவர் தங்குவதற்காக நிக்ரோத ஆராமம் என்னும் தோட்டத்தை அழகுபடுத்தி வைத்தார்கள்.

பகவன் புத்தர், நகரத்திற்கு வந்தபோது மலர் முதலியவற்றை எடுத்துக்கொண்டு நகர மக்கள் அவரை எதிர்கொண்டு அழைத்தார்கள். அவர்கள் சிறுமிகளை முதலில் அனுப்பினார்கள். அவர்களுக்குப் பிறகு அரச குமாரர்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள். பகவன் புத்தர் கணக்கற்ற அர்ஹந்தரோடு நிக்ரோத ஆராமத்தில் சென்று தங்கினார். ஆனால், இயற்கையிலே இறுமாப்புள்ள அரசகுலத்தில் பிறந்த சாக்கியர்கள், 'சித்தார்த்த குமரன் வயதிலே நமக்கு இளையவன்; நமக்கு மருமகனாக வுள்ளவன்; பேரனாகவுள்ளவன்; என்று நினைத்துத் தாங்கள் வணக்கம் செய்யாமல் தமது குமாரர்களையும் குமாரத்திகளை யும் வணக்கம் செய்வித்தார்கள்.

அவர்களுடைய எண்ணத்தை அறிந்த பகவன் புத்தர், தமது இருத்தியினாலே மண்ணிலிருந்து கிளம்பி ஆகாயத்திலே நின்றார். இதனைக் கண்ட சுத்தோதன அரசர் “உத்தமரே! நீர் பிறந்த நாளிலே அசித முனிவரை வணங்க உம்மை அழைத்துவந்தபோது உமது பாதங்கள் முனிவர் சிரசில் பட்டதைக் கண்டு நான் உம்மை வணங்கினேன். அது என்னுடைய முதலாவது வணக்கம். வப்பமங்கல விழாவிலே நாவல் மரத்தின் கீழே தாங்கள் யோகத்தில் அமர்ந்திருந்ததைப் பார்த்து வணங்கினேன். அது என்னுடைய இரண்டாவது வணக்கம். இப்போது உமது இருத்தியைக் கண்டு உம்மை வணங்குகிறேன். இது என்னுடைய மூன்றாவது வணக்கம்" என்று கூறிக் கைகூப்பிப் புத்தரை வணங்கினார். இதைக் கண்ட மற்ற சாக்கியர்களும் இவரைக் கை கூப்பி வணங்கினார்கள்.

பாவா நகரத்தில் மள்ளர் குலத்தில் பிறந்த நான்கு அரச குமாரர்கள் அவ்வமயம் ஏதோ காரணமாகக் கபிலவத்து நகரத்துக்கு வந்திருந்தார்கள். அவர்கள் பெயர் கோதிகன், சுபாகு, வல்லியன், உத்தியன் என்பன. அவர்கள் புத்தர் பெருமான் ஆகாயத்தில் நின்று காட்டிய இருத்தியைக் கண்டு வியப்படைந்தார்கள். பிறகு, அவர்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து சந்நியாசம் பெற்றார்கள். கொஞ்ச நாளைக்குப் பிறகு அவர்கள் அர்ஹந்த நிலையை யடைந்தார்கள்.