பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

வீழ்ந்து வணங்கி அவருடைய இரு பாதங்களையும் பிடித்துக்கொண்டு அழுதார். புத்தர், யசோதரையாரைத் தமது மகள் போலக் கருதி வாளா இருந்தார். பிறகு யசோதரையாரின் மனம் தன் வயப்பட்டபோது சுத்தோதன அரசரையும் பகவன் புத்தரையும் கண்டு வெட்கங்கொண்டு எழுந்து மௌனமாக இருந்தார்.

அப்போது சுத்தோதன அரசர், பகவன் புத்தரிடம் இவ்வாறு கூறினார். "சுவாமி! தாங்கள் ஆடையணிகளை நீக்கிக் காவி உடை தரித்ததைக் கேட்டு என் மருமகளும் ஆடை அணிகளைக் கழற்றி விட்டுக் காஷாய ஆடை அணிந்தார். ஒரு நாளைக்கு ஒரே வேளை உணவு உண்டார். தாங்கள் விலையுயர்ந்த ஆசனங்களை நீக்கிச் சாதாரண ஆசனத்தில் அமர்வதைக் கேட்டு இவரும் சாதாரண ஆசனத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டார். அரச போகங்களை எல்லாம் நீக்கி ஒரு துறவியைப் போலவே வசித்துவருகிறார்" இவ்வாறு யசோதரைத் தேவியாரைப் பற்றிச் சுத்தோதன அரசர் கூறியதைக் கேட்ட பகவன் புத்தர் அவர்களுக்குச் சந்திர கின்னர ஜாதகக் கதையை உபதேசம் செய்தார்.

யசோதரையார் தாமும் பிக்குணியாக விரும்பினார். ஆனால், பகவன் புத்தர் அதற்கு இணங்காமல், அவருக்குத் துறவு கொடுக்க மறுத்தார்.

இராகுலன்

கபிலவத்து நகரத்திற்குப் பகவன் புத்தர் வந்த ஏழாம் நாள், பிக்குச் சங்கத்தாருடன் அரண்மனைக்குப் போய் பகவன் புத்தர் உணவு கொண்டார். அப்போது யசோதரைத் தேவியார், தமது ஏழு வயதுள்ள இராகுல குமாரனை நன்றாக அலங்காரம் செய்து, “மகனே! அதோ பிக்குகள் சூழப்போகிற, பொன்நிறமாகப் பிரகாசிக்கிறவர் உன்னுடைய தகப்பனார். உனக்கு உரியதை அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்” என்று கூறி அனுப்பினார். இராகுல குமாரன் புத்தரிடம் போய், மிக அன்போடு “ஓ! சிரமணரே! தங்களுடைய நிழல் எனக்கு மிகவும் சுகமானது” என்பது முதலாகச் சில வார்த்தைகள் கூறினார். பகவன் புத்தர் பிக்குச் சங்கத்துடன் உணவு கொண்டபிறகு அனுமோதனா தர்மோப தேசம் செய்து ஆசனத்திலிருந்து எழுந்து நடந்தார். இராகுல குமாரனும், “சிரமணரே! எனக்குக் கிடைக்க வேண்டியதைக் கொடுங்கள்” என்று பின் தொடர்ந்து சென்றான்; புத்தரும், குமாரனை வர வேண்டாமென்று தடுக்கவில்லை. பார்த்துக்