பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை

131

பகவன் புத்தர் ஸ்திரீகளைச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள உடன் பட்டபோதிலும் அதனால் நேரிடப் போகிற தீமையை நன்கு உணர்ந்தார். அவர் ஆனந்த மகா தேரரிடம், “பௌத்த சங்கத்திலே ஸ்திரீகள் சேர்க்கப்படாமல் இருந்தால், பௌத்த தர்மம் ஆயிரம் ஆ ண்டுகள் நிலைபெற்றிருக்கும். ஸ்திரீகள் சேர்க்கப்படுவதனாலே தர்மம் இப்போது ஐந்நூறு ஆண்டுகள் தான் நிலைத்திருக்கும்” என்று அருளிச் செய்தார்.

இராசமாதேவி கேமை

வைசாலியிலிருந்து ததாகதர் சிராவத்தி நாட்டுக்குச் சென்று அங்குக் கார்காலத்தைக் கழித்தார். பின்னர் இராசகிருகம் திரும்பி வந்தார். வந்து வெளுவனத்தில் தங்கியிருந்தபோது, விம்பசார அரசன் இராணியாகிய கேமை என்பவள் பௌத்த உபாசிகையானாள். கேமை, தான் மிகவும் அழகுள்ளவள் என்னும் இறுமாப்பினாலே பகவன் புத்தரிடம் வர விரும்பவில்லை. விம்பசார அரசன் பகவரைக் காண வரும்போது இவ்வரசியையும் வரும்படி அழைப்பார். இறுமாப்புள்ள அரசியார் வர மறுப்பார். ஒரு சமயம், அரசியார், வெளு வனத்தில் ஒரு புறம் உலாவிக் கொண்டிருந்தபோது, விம்பசார அரசன் அரசியாரைப் புத்தரிடம் அழைத்து வந்தார்.

ததாகதர், அரசியாரின் அழகைப் பற்றிய துரபிமானத்தை நீக்கக் கருதி, தமது இருத்தி சக்தியினாலே ஆகாயத்திலே ஒரு அழகான தெய்வ மகள் தோன்றும்படிச் செய்தார். அவ்வாறு தோன்றிய அழகான தெய்வ மகளை அரசியார் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்பெண் உருவம், இளமைப் பருவம் நீங்கி நடுத்தர வயதடைந்தது. பிறகு, நடுத்தர வயது நீங்கிக் கிழப்பருவம் அடைந்தது. பின்னர் கிழப் பருவத்திலே அப்பெண் உருவம் செத்துப்போயிற்று. இக்காட்சியைக் கண்ட கேமை என்னும் அரசியாருக்குத் தமது அழகைப் பற்றிய இறு மாப்பு நீங்கியது. பகவன் புத்தருடைய உபதேசத்தைக் கேட்கவேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. அப்போது, ததாகதர் சில சூத்திரங்களை ஓதினார். அதைக் கேட்ட அரசியார் அர்ஹந்த நிலையையடைந்தார். அந்நிலையடைவதற்கு முன்பு மாரன் அரசியாரை மருட்டினான். னால் மாரனை வென்று அர்ஹந்த நிலையையடைந்தார் அவர்.