பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

அந்தப் பூசையைப் பகவர் ஏற்றுக் கொள்ள வேண்டும், 2. அடியேன் அழைத்து வருகிறவர்களுக்குப் பகவர் தரிசனம் தரவேண்டும், 3. அடியேன் மனம் தடுமாறித் திகைக்கும்போது பகவர் என்னைத் தேற்றி நல்வழிப்படுத்த வேண்டும், 4. அடியேன் இல்லாத காலத்தில் மற்றவருக்குச் செய்த உபதேசங்களை அடியேனுக்கும் உபதேசிக்க வேண்டும். இந்த எட்டு வரங்களையும் பகவன் புத்தர் அருளினால் அடியேன் அணுக்கத் தொண்டனாக இருக்க இசைகிறேன்" என்று கூறினார்.

பகவன் புத்தர் இந்த வரங்களை அளித்து ஆனந்த தேரரைத் தமக்கு அணுக்கத் தொண்டராக ஏற்றுக்கொண்டார். அது முதல் பகவன் புத்தர், பரிநிர்வாணம் அடைகிற வரையில் ஆனந்த மகாதேரர் அவருக்கு அணுக்கத் தொண்டராக இருந்தார்.

அங்குலி மாலன்

அக்காலத்திலே கோசல நாட்டிலே அங்குலி மாலன் என்னும் ரு கொடியவன் இருந்தான். அவன் வழிப் போக்கரைக் கொன்று அவர்களின் கை விரல்களில் ஒன்றை எடுத்து மாலையாகக் கட்டிக் கழுத்தில் அணிந்து கொண்டிருந்தான். அதனால் அவனுக்கு அங்குலி மாலன் என்னும் பெயர் உண்டாயிற்று. அவன் அணிந்திருந்த அங்குலி மாலையில் 998 விரல்கள் இருந்தனவாம். இந்தக் கொடிய கொலை காரனை நல்வழிப்படுத்த பகவன் புத்தர் கருதினார். அவனிடம் போகக் கூடாதென்று பலர் பகவன் புத்தரைத் தடுத்தார்கள். ஆயினும் பகவர் அவனிருக்கும் காட்டில் சென்று அவனுடன் உரையாடி அவனை நல்வழிப் படுத்தினார். அவன் நல்லறிவுபெற்றுத் திரிசரணம் அடைந்து புத்த சங்கத்தில் சேர்ந்து துறவியானான். அன்றியும், சிறிது காலத்திற்குள் அர்ஹந்த் நிலையையும் அடைந்தான்.

கொலைக் குற்றம்

புத்தரின் பௌத்த மதம் நாளுக்குநாள் வளர்ந்து நாட்டில் செல்வாக்குப் பெறுவதைக் கண்ட எதிர் சமயத்துத் தலைவர்கள் மிகவும் பொறாமை கொண்டார்கள். பகவன் புத்தர்மீது பழி சுமத்தி அவருக்குச் செல்வாக்கு இல்லாமல் செய்ய எண்ணினார்கள். அவர்கள் அதற்காகச் சுந்தரி என்னும் பெயருள்ள ஒருத்தியை நியமித்தார்கள். சுந்தரி, பகவன் புத்தர் தங்கியிருந்த தோட்டத்திற்கு அடிக்கடி சென்றுவந்தாள். யாரேனும் அவளைக்கண்டு எங்குபோய் வருகிறாய் என்று கேட்டால், புத்தரிடம் சென்று வருவதாகவும்