பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

அஜாத சத்துரு

141

பகவன் புத்தரை உயிர்போல் கருதியிருக்கும் விம்பசார அரசன் இருக்கிறவரையில் புத்தருக்கு யாதொரு தீங்கும் செய்யமுடியாது என்று அறிந்த தேவதத்தன், இளவரசனான அஜாத சத்துருவிடம் சென்று நல்லது சொல்வதுபோலச் சில வார்த்தைகள் கூறினான். தந்தை யாகிய விம்பசார அரசனைக் கொன்று மகதநாட்டின் அரசனாகும்படித் தேவதத்தன் அஜாத சத்துரு வுக்குக் கூறினான். அரசகுமாரனும் அரசப் பதவிக்கு ஆசைப்பட்டுத் தன் தந்தையைக் கொல்ல உடன்பட்டான். குற்றுடைவாளைக் கையில் ஏந்திக்கொண்டு அரசகுமாரன் இரவும் பகலும் அரண்மனையில் நடமாடுவதைக் கண்டு ஐயமுற்ற அரசவூழியர், விம்பசார அரசரிடம் அச் செய்தியைக் கூறினார்கள். விம்பசார அரசன் மகனை அழைத்துப் புத்திமதி கூறி, தான் அரசாட்சியைவிட்டு நீங்கி, மகனுக்கு அரசப் பட்டம் கட்டினான்.

وو

தனது எண்ணம் நிறைவேறாமற் போனதைக் கண்ட தேவதத்தன், மீண்டும் அஜாத சத்துருவினிடம் சென்று, “உனது தந்தை உயிருடன் இருக்கும்வரையில் உனக்கு உண்மையான அரச அதிகாரம் இல்லை என்று கூறி விம்பசார அரசனைக் கொன்று விடும்படித் தூண்டினான். அதனைக்கேட்ட அஜாதசத்துரு, அரசனைச் சிறையில் அடைத்து, உணவு கொடுக்காமல் பல கொடுமை செய்தான். அரசன் சிறைச் சாலையில் வருத்தம் உற்றுச் சில நாட்களுக்குப் பிறகு இறந்து போனான்.

வில்வீரர்

தேவதத்தன், அரசனான அஜாதசத்துருவின், உதவிபெற்றுப் பகவன் புத்தரை அழிக்கத் தொடங்கினான். வில்வீரர் பதினாறு பேரை ஏற்படுத்திப் பகவன் புத்தர் போகும்போது அம்பு எய்து அவரைக் கொல்லும்படி ஏவினான். வீரர்கள் வில் அம்புடன் சென்று, வழியில் காத்திருந்தார்கள். பகவன் புத்தர் வந்தபோது அவரைக் கண்ட வீரர்கள் திகைத்துப் போனார்கள். பகவனின் தெய்விகத் தன்மை அவர்களின் மனத்தை மாற்றிவிட்டது. அவர்கள் ஓடிச்சென்று பகவன் பாதங்களில் விழுந்து வணங்கிச் சென்றார்கள். அவர்களில் ஒருவன், தேவதத்தனிடம் சென்று, பகவன் புத்தரின் உயிரைப் போக்குவது முடியாது என்று கூறினான்.