பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை

151

நகரத்தின் வடக்குவாயில் வழியாக நகரத்துக்குள் கொண்டு போய் நகரத்தின் நடுவில் சென்று அங்கிருந்து கிழக்குப் பக்கமாகக் கொண்டு போய் கிழக்கு வாயிலின் அருகில் இருக்கிற மகுட பந்தனம் என்னும் மள்ளரின் கோயிலுக்குப் பக்கத்தில் திருமேனியைத் தீயிட்டு எரிக்க வேண்டும் என்பது” என்று அநுருத்த மகாதேரர் கூறினார்.

அவ்வாறே செய்வோம் என்று மள்ளர்கள் குசிநகரத்து வீதிகளை அலங்காரம் செய்தார்கள். பிறகு இன்னிசைகள் முழங்க ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் திருமேனியைத் தூக்கிக் கொண்டு நகரத்துக்கு வடக்கே கொண்டுபோய் வடக்கு வாயிலில் நுழைந்து நகரத்தின் மத்தியில் கொண்டுவந்து பிறகு கிழக்கு வாயில் பக்கமாக மகுட பந்தன ஆலயத்துக்கு அருகில் கொண்டு போனார்கள். பிறகு, மள்ளர் வணக்கத்துக்குரிய ஆனந்த மகா தேரரிடம் இனி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். ஆனந்த மகாதேரர், “அரசச் சக்கரவர்த்தி இறந்துபோனால் அவர் உடம்பை என்ன செய்கிறார்களோ அப்படிச் செய்யுங்கள்?” என்று கூறினார்.

"வேசந்தர்களே! கேளுங்கள். அரசச் சக்கரவர்த்தி இறந்து போனால் அந்த உடம்பைத் துணியினாலும் பருத்திப் பஞ்சினாலும் ஒன்றின்மேல் ஒன்றாக ஐந்நூறு சுற்றுச் சுற்றிக் கட்டிய பிறகு பெரிய இரும்புப் பாத்திரத்தில் நிறைய எண்ணெய் ஊற்றி அதில் கட்டின உடம்பை வைத்து மற்றொரு இரும்புப் பாத்திரத்தினால் மூடுவார்கள். பிறகு, விறகுகளை அடுக்கி அதன்மேல் உடம்பை வைத்துத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். கொளுத்தி எரித்து கரியான எலும்பை எடுத்து அதன் மேல் சேதியம் கட்டுவார்கள். வேசந்தர்களே! பகவன் ததாகதருடைய திருமேனியை அந்த விதமாகச் செய்யுங்கள்” என்று ஆனந்த மகாதேரர் கூறினார்.

குசிநகரத்து மள்ளர்கள் ஆனந்த மகாதேரர் சொன்ன முறைப் படியே பகவன் புத்தருடைய திருமேனியைத் துணி யினாலும் பருத்திப் பஞ்சினாலும் சுற்றி இரும்புப் பாத்திரத்தில் எண்ணெயில் இட்டு மூடிப் பிறகு ஈம விறகை அடுக்கி அதன் மேல் திருமேனியை வைத்தார்கள்.

அப்போது குசிநகரத்து மள்ளர் தலைவர் நால்வர் நீராடி நல்லாடை அணிந்து பகவன் புத்தரின் திருமேனிக்குத் தீ யிட்டார் கள். என்ன வியப்பு! தீ பற்றவில்லை!