பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு: 1 திரிபிடகம்

பௌத்தமத வேதங்களுக்குத் திரிபிடகம் என்பது பெயர். பாலிமொழியில் திபிடகம் என்று கூறுவர். அவற்றிற்கு விநய பிடகம், அபிதம்ம பிடகம், சூத்திரபிடகம் என்று பெயர். அவை பாலி மொழியிலே எழுதப் பட்டுள்ளன.

புத்தர் பெருமான் நாற்பத்தைந்து ஆண்டுகளாகத் தமது கொள்கைகளை நாடெங்கும் போதித்து வந்த போதிலும், அவர் அக் கொள்கைகளை நூல் வடிவமாக எழுதி வைக்கவில்லை. ஆனால், அவருடைய சீடர்கள், அவருடைய போதனைகளை இரண்டு சம்ஹிதைகளாகத் தொகுத்துப் பாராயணம் செய்து வந்தார்கள். அவற்றிற்கு விநய சம்ஹிதை, தர்ம சம்ஹிதை என்று பெயர், சம்ஹிதை என்றால் தொகுப்பு என்பது பொருள்.

பகவர் புத்தர் நிர்வாண மோக்ஷம் அடைந்த சில தினங்களுக்குப் பிறகு, மகதநாட்டின் தலைநகரமான இராசகிருக நகரத்துக்கு அருகில் ஸத்தபணி என்னும் மலைக்குகையிலே கார் காலத்தைக் கழிக்கும் பொருட்டு ஐந்நூறு தேரர்கள் (பௌத்தத் துறவிகள்) ஒருங்கு கூடினார்கள். இதுவே பௌத்தரின் முதல் மகாநாடு ஆகும். புத்தரின் முக்கியச் சீடர் ஆகிய மகாகாசிபர், இந்த மகாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். இம் மகாநாட்டிலே, புத்தர் பெருமான் அருளிச்செய்த விநய போதனைகளை உபாலி என்னும் தேரர் எடுத்து ஓதினார். இதற்கு விநய பிடகம் என்று பெயரிட்டனர். மற்றொரு தேரராகிய ஆனந்தர், புத்தர் அருளிச் செய்த தர்மபோதனைகளை இம்மகாநாட்டில் ஓதினார். இதற்கு தம்ம (தர்ம) பிடகம் என்று பெயரிட்டனர். இவ்வாறு முதல் பௌத்த சங்கத்திலே, புத்தருடைய போதனைகள் இரண்டு பிடகங்களாகத் தொகுக்கப்பட்டன.

பிற்காலத்திலே, அபிதம்ம பிடகத்திலிருந்து சில பகுதிகளைத் தனியாகப் பிரித்து அதற்குச் சூத்திரபிடகம் என்று பெயரிட்டார்கள்.