பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

165

வாக்கினால் உண்டாகும் குற்றங்களை அடக்குக. வாக்கினை அடக்கி ஆள்க. வாக்கினால் உண்டாகும் தீய சொற்களை விலக்கி நல்ல பேச்சுக்களையே பேசுக.

மனத்தினால் உண்டாகும் குற்றங்களை அடக்குக. மனத்தை அடக்கி ஆள்க. மனத்தில் உண்டாகும் குற்றங்களை நீக்கி நல்ல எண்ணங்களையே எண்ணுக.

உடல், வாக்கு, மனம் இவைகளை அடக்கி ஆள்கிற அறிஞர், உண்மையாகவே நல்ல அடக்கம் உள்ளவர் ஆவர்.

அழுக்குகளில் எல்லாம் அறியாமை என்னும் அழுக்கு மிகக் கொடியது. இது பெரிய குற்றம். பிக்குகளே! இந்த அழுக்கை நீக்குங்கள். அழுக்கற்று இருங்கள்.

உயிரைக் கொல்கிறவரும், பொய் பேசுகிறவரும், திருடு கிறவரும், பிறன் மனைவியை விரும்புகிறவரும், மயக்கந்தருகிற கள்ளைக் குடிக்கிறவரும் இவ்வுலத்திலேயே தமது வேரைத் தாமே தோண்டிக்கொள்கிறார்கள்.

பிறருடைய குற்றம் எளிதில் காணப்படுகிறது. பிறருடைய குற்றங்களைக் காற்றில் பதரைத் தூற்றுவது போலத் தூற்றுகிறவர், தந்திரமுள்ள சூதாடி தோல்வியை மறைப்பதற்குச் சூதுக்காயை ஒளிப்பதுபோல தனது சொந்தக் குற்றத்தை மறைக்கிறார்.

பிறர் மனைவியிடத்துச் சோரம் போகிறவனுக்குப் பாவம், அமைதியான தூக்கம் இன்மை, பழிச்சொல், நரகம் என்னும் இந் நான்கு தீமைகள் விளைகின்றன. மேலும் அவன் பாவத்தை யடைந்து மறுமை யில் தீக்கதி அடைகிறான். அச்சம் உள்ள ஒருவன், அச்சம் உள்ள ஒருத்தியோடு, கூடா ஒழுக்கத்தினால் அடைகிற இன்பம் மிகச் சிறியது. அரசனும் அவனைக் கடுமை யாகத் தண்டிக்கிறான். ஆகவே, பிறன் மனைவியை விரும்பா திருப்பாயாக.

தீய காரியத்தைச் செய்யாமல் விடுவது நல்லது. ஏனென்றால், தீய செயல்கள் பிறகு துன்பத்தைத் தருகின்றன. நல்ல காரியத்தை நன்றாகச் செய். ஏனென்றால், நல்ல காரியத்தைச் செய்வதனாலே எவரும் துன்பம் அடைகிறதில்லை.

நல்லொழுக்கமும் நல்லறிவும் உடையவராய்த் தீமைகளை நீக்கிய அறிஞர் கிடைப்பாரானால், அவரிடம் அன்புடனும் அக்கறை யுடனும் நட்புக்கொண்டு பழகு.