பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தார்த்தரின் இல்லற வாழ்க்கை

சித்தார்த்தர் பிறப்பு

இந்திய தேசம் என்றும் நாவலந்தீவு என்றும் கூறப்படுகிற பரதகண்டத்திலே, மத்திய தேசத்திலே சாக்கிய ஜனபதத்திலே கபிலவத்து என்னும் அழகான நகரம் ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் அந்த நகரத்தை ஜயசேனன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவ்வரசனுக்குச் சிம்மஹணு என்னும் மகன் பிறந்தான். சிம்ம ஹணுவுக்குச்

சுத்தோதனர், சுல்லோதனர், தோதோதனர், அமிதோதனர், மிதோதனர் என்னும் ஐந்து ஆண் மக்களும், அமிதை, பிரமிதை என்னும் இரண்டு பெண் மகளிரும் பிறந்தனர். இவர்களுள் மூத்த மகனான சுத்தோதனர், தமது தந்தை காலமான பிறகு, அந் நாட்டின் அரசரானார். சுத்தோதன அரசரின் மூத்த மனைவியாரான மஹாமாயா தேவிக்கு ஒரு ஆண் மகவும், இளைய மனைவியாரான பிரஜாபதி கௌதமிக்கு ஒரு ஆண் மகவும், ஒரு பெண் மகவும் ஆக மூன்று மக்கள் பிறந்தனர். மாயா தேவிக்குப் பிறந்த மகனுக்குச் சித்தார்த்தன் என்று பெயர்சூட்டினார்கள். பிரஜாகௌதமைக்குப் பிறந்த மகனுக்கு நந்தன் என்றும், மகளுக்கு நந்தை என்றும் பெயர்சூட்டி னார்கள். இவர்களுள் சித்தார்த்த குமாரன் போதி ஞானம் அடைந்து புத்த பகவானாக விளங்கினார். இவருடைய வரலாற்றினை விரிவாகக் கூறுவோம்.

கபிலவத்து நகரத்திலே ஆண்டுதோறும் நடைபெற்ற விழாக் களில் ஆஷாடவிழா என்பதும் ஒன்று. இந்த விழா வேனிற் காலத்திலே ஆறு நாட்கள் கொண்டாடப்படும். இவ் விழாவின் போது நகர மக்கள் ஆடை அணிகள் அணிந்து, விருந்து உண்டு, ஆடல் பாடல் வேடிக்கை வினோதங்களில் மகிழ்ந்திருப்பர். சுத்தோதன அரசரும் நறுமண நீரில் நீராடி உயர்ந்த ஆடை அணிகள் அணிந்து நறுமணம் பூசி அறுசுவையுண்டி அருந்தி அரசவையிலே அமைச்சர், சேனைத் தலைவர் முதலிய குழுவினர் சூழ அரியாசனத்தில் வீற்றிருந்து ஆஷாடவிழாக் கொண்டாடுவார்.