பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

அழைத்து அவர்களுக்கு அறுசுவை உணவுகளை விருந்தளித்தார். பிறகு, “என் மகனுடைய இலட்சணங்களை அறிந்து அவனுக்கு ஏற்ற பெயரைச் சூட்டுங்கள். அன்றியும், அவன் வாழ்க்கையில் நடைபெறப் போகிறவைகளையும் பிழையில்லாமல் கணித்துக் கூறுங்கள்” என்று கேட்டார். இந்த நூற்றெட்டு நிமித்திகர்களில் இராமர், தஜர், இலக்குமணர், மந்த்ரி, கொண்டஞ்ஞர், போஜர், சுயாமர், சுதத்தர் என்னும் எண்மரும் மிகத் தேர்ந்த நிமித்திகர்கள். இவர்களுள்ளும் கொண்டஞ்ஞர், வயதில் இளையவராக இருந்தாலும், கணித நூலிலே மற்றவரை விட மிகத் தேர்ந்தவராக இருந்தார்.

அரசர் கேட்டுக்கொண்டபடியே பேர்போன இந்த எட்டு நிமித்திகர்களும் போதிசத்துவ குமாரனுடைய திருமேனியிலே காணப் பட்ட அங்க அடையாளங்களைக் கூர்ந்து நோக்கினார் கள். இவர்களில் ஏழுபேர் தமது இரண்டு கைவிரல்களைக் காட்டி, இந்தக் குமாரன் இல்லறத்தில் இருந்தால் சக்கரவர்த்தி ஆவார்; துறவு பூண்டால் புத்தர் ஆவார் என்று இரண்டுவிதக் கருத்தைக் கூறினார்கள்.

ஆனால்,ஆண்டில் இளையவராகிய கொண்டஞ்ஞர், குழந்தையின் நெற்றியின் நடுவிலே வலமாகச் சுருண்டு வளர்ந் திருக்க ஊர்ஷ்ண உரோமத்தைக் கண்டு, ஒரு விரலை மட்டும் காட்டி “இந்தக் குழந்தை கட்டாயம் இல்லறத்தைவிட்டுத் துறவறம் பூண்டு புத்தர் ஆவார்" என்று அறுதி இட்டுக் கூறினார். மேலும், "இவர் உலகத்திற்கு அர்த்தசித்தி4 செய்யப் போகிறவர். ஆகையினாலே இவருக்குச் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டுவது தகுதியாகும்” என்றும் கூறினார்.

கொண்டஞ்ஞ முனிவர் கூறியதைக் கேட்ட சுத்தோதன அரசர், “வாழ்க்கையிலே வெறுப்பை உண்டாக்கும் காரணங் களைக் கண்டு மக்கள் துறவு கொள்வது வழக்கம். வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டு துறவுபூண்டவர் வீடுபேறடைவதற்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். என்னுடைய குமாரன் எந்தெந்தக் காரணங்களினால் உலக வாழ்க்கை யில் வெறுப்படைவான் என்பதைக் கண்டு கூறவேண்டும்.” என்று

கேட்டார்.

இவ்வாறு அரசர் கூறியதைக் கேட்ட நிமித்திகர் மேலும் ஆராய்ந்து பார்த்து இவ்வாறு சொன்னார்: “வயது முதிர்ந்த கிழவர், நோயாளி, பிணம், துறவி ஆகிய இந் நான்குபேரைக் காண்பாரானால் உமது குமாரன் உலக வாழ்க்கையை வெறுத்துத் துறவு கொள்வார்.'