பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9

இதைக்கேட்ட தேவதத்தன் மீண்டும் அவர்களை அனுப்பி இவ்வாறு கூறினான்: "பறவை உயிருடன் இருந்தாலும் இறந்து போனாலும் அது எனக்கே உரியது. என்னுடைய வில்வித்தையின் திறமையினாலே அதை அம்பெய்து கீழே வீழ்த்தினேன். ஆகையால் அது எனக்கே உரியது; உடனே அனுப்பிவைக்க வேண்டும்.

""

இதற்குச் சித்தார்த்த குமாரன் கூறிய மறுமொழி இது: “எல்லா உயிர்களையும் காப்பாற்றவேண்டும் என்பது என் கொள்கை. புண்பட்ட இப் பறவையை நான் எடுத்துக் காப்பாற்றுகிறேன். இது எனக்குரிய தன்று என்று நீங்கள் கருதினால், சாக்கிய குலத்துப் பெரியவர்களைக் கேளுங்கள். அவர்கள் முடிவுப்படி செய்கிறேன்.

அதன்படியே சாக்கிய குலத்துப் பெரியவர்களைக் கேட் டார்கள். அவர்களில் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் இவ்வாறு கூறினார்: “யார் அன்புடன் போற்றிக் காக்கிறார்களோ அவர்களே உரிமையாளரும் உடமை யாளரும் ஆவார். அழிக்கிறவர் உரிமையுடையவர் அல்லர்.” அவர் கூறிய இந்தத் தீர்ப்பை மற்றவர் எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள். இரம்மிய மாளிகை

சித்தார்த்த குமாரனுக்குப் பதினாறு வயது ஆயிற்று. அவரைத் துறவு கொள்ளாதபடித் தடுத்து இல்லறத்திலேயே நிறுத்தச் சுத்தோதன அரசர் கண்ணுங் கருத்துமாக இருந்தார். அரசர் மூன்று சிறந்த மாளிகைகளை அமைத்துச் சித்தார்த்த குமாரனுக்குக் கொடுத்தார். இந்த மாளிகைகள் கார்காலம் வேனிற்காலம் கூதிர் காலம் என்னும் மூன்று காலங்களில் தங்கி வசிப்பதற்கு ஏற்றதாக அமைந்திருந்தன.

கார்காலத்தில் வசிப்பதற்காக அமைக்கப்பட்டது இரம்மிய மாளிகை என்பது. இது ஒன்பது மாடிகளைக் கொண்டிருந்தது. ஒன்பது மாடிகளுள், மேல் மாடிகள் கீழ் மாடிகளைவிட ஒன்றுக் கொன்று உயரம் குறைவாக இருந்தன. மழைக் காலத்து வாடைக் காற்று மாளிகைக்குள் புகாதபடிக் கதவுகளும் சாளரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மாளிகைச் சுவர்களில் நெருப்பு எரிவது போன்ற ஓவியங்கள் எழுதப் பட்டிருந்தன. தரையில் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. இந்த மாளிகையில் இருந்த தலையணைகளும் திண்டுகளும் போர்வைகளும் ஆடைகளும் கம்பளிகளால் ஆனவை. கார்காலத்தின் குளிர் தோன்றாதபடி அமைந்திருந்தது இந்த மாளிகை.