பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

தமிழில் சமயம் கௌதம புத்தரின் வாழ்க்கை

41

மீது போர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கிடைத்தற்கரிய சக்கரவர்த்திப் பதவியைச் சித்தார்த்தகுமாரன் பெற்றால், சக்கர வர்த்திகள் நீதி முறைப்படி நடப்பார்களாகையினாலே, அவருக்குக் கீழடங்கி நாம் அரசாட்சியை நடத்தலாம். அவர் துறவுபூண்டு புத்த பதவியை யடைந்தால், அவரிடம் அறநெறி கேட்டு அவருக்குச் சீடராகலாம், ஆகவே இரண்டு விதத்திலும் நமக்கு நன்மையே.

இவ்வாறு விம்பசார அரசன் கூறியதைக் கேட்ட அமைச்சர்கள் சரி என்று அவர் கருத்தை ஒப்புக் கொண்டார்கள்.

சித்தார்த்தர் கேட்ட தெய்விகக் குரல்

சித்தார்த்த குமாரன் உலக போகத்தில் மூழ்கி அரண்மனையிலே இன்ப சுகங்களைத் துய்த்துக்கொண்டு கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்த போதிலும் நாளடைவில் அவருக்கு இல்வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றிற்று.

இன்ப வாழ்க்கையில் வெறுப்புத் தட்டியது. அவருடைய உள்ளத்தில் ஏதோ இரகசியச் செய்தி புலப்பட்டது. “குமாரனே! விழித்துக்கொள், தெளிவு கொள். நிலையற்ற அழிந்துபோகிற ஐம்புல இன்ப சுகங்களில் காலங் கழிக்காதே. நிலையாமையை உணர்ந்து நிலை பெற்ற இன்பத்தை நாடி மக்களுக்கு நல்வழி காட்டு. நீ வந்த வேலையை நிறைவேற்ற முற்படு என்று ஏதோ ஒரு குரல் தன் உள்ளத்தில் கூறுவது போல அவருக்குத் தோன்றிற்று.

இந்தக் குரல் நாளுக்குநாள் உரத்த குரலாகக் கேட்பதுபோலத் தோன்றியது. அழகிய இளமங்கையரின் இன்னிசைப் பாடல்களைக் கேட்கும்போதும் இதே குரல் அவர் காதில் கேட்டது. யாழின் அமிழ்தம் போன்ற இன்னிசையிலும் இதே குரல் இவர் உள்ளத்தைத் தூண்டியது. வேய்ங்குழலின் தீஞ்சுவை நாதத்திலும் இக்குரல் கேட்டது. ஆடல் பாடல் களிலும் நாட்டிய நடனங்களிலும் இச் செய்தியே இவர் மனத்தில் பதிந்தது.

அரசபோகங்களிலும் இல்லற வாழ்க்கையிலும் அவர் உள்ளம்

வெறுப்படைந்தது.

சுத்தோதனர் கண்ட கனவு

ஓர் இரவில், சுத்தோதன அரசர் கண்ணுறங்கியபோது அவருக்குச் சில கனவுகள் தோன்றின. அன்றிரவு அவர் கண்ட கனவுகள் இவை: