பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

பின்னர்ப் பிணத்தைப் பற்றி நினைத்தார். சாவு எல்லோருக்கும் ஏற்படுகிறது. ஆனால், அதை உணராதவர்கள் பிணத்தைக் காணும்போது அதை வெறுத்து அருவெறுப் படைகிறார்கள். அவ்வாறு வெறுப்பது தவறு. சாவிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது. எனக்கும் மரணம் உண்டு என்று எண்ணியபோது, அவருக்கிருந்த ஜீவித மதம் (வாழ்க்கைப் பற்று) அவரைவிட்டு அகன்றது.

கடைசியாகச் சந்நியாசியைப் பற்றி யோசித்தார். தீய எண்ணங் களும் தீய செயல்களும் இல்வாழ்க்கையினால் ஏற்படுகின்றன. இல்லறத்தில் உயரிய எண்ணங்களுக்கும் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் இடமில்லை. உயர்ந்த எண்ணங்களுக்கும் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் துறவறம் நல்லது, என்று நினைத்து அதில் விருப்பங் கொண்டார்.

இவ்வாறு தமக்குள் எண்ணிய வண்ணம் சித்தார்த்த குமாரன் பூஞ்சோலையை யடைந்தார். அங்குப் பலவித இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டார். மாலை நேரமானவுடன் தெளிந்த நீருள்ள குளத்திலே நீராடினார். நீராடிய பிறகு ஒரு கற்பாறையில் அமர்ந்து தமது உடம்பை நன்றாக அலங்காரம் செய்து கொள்ள வேண்டுமென்று நினைத்தார். அப்போது பணிவிடையாளர் வந்து அவரைத் தேவேந் திரன்போல அலங்காரம் செய்தனர். ஆனால், இல்லற வாழ்க்கையின் துன்பங்களும் துறவற வாழ்க்கையின் மேன்மைகளும் அவர் மனத்தை விட்டு அகலாமல் இருந்தன. அவர் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. அரண்மனை திரும்பியது

தேவேந்திரனைப் போன்று அலங்கரிக்கப்பட்ட சித்தார்த்த குமாரன் பூஞ்சோலையிலிருந்து அரண் மனைக்குப் புறப்பட்டார். இன்னிசை முழங்க, பரிவாரங்கள் புடைசூழ அவர் தேரில் அமர்ந்தார். அவ்வமயம் சுத்தோதன அரசரால் அனுப்பப்பட்ட ஒருவர் வந்து, யசோதரைத் தேவியாருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தெரிவித்தார். இதைக் கேட்ட இவர், தாம் செய்ய நினைத்திருக்கும் முயற்சிக்கு ஒரு தடை பிறந்தது என்று மனதில் நினைத்து, "எனக்கு ரு இராகுலன் பிறந்தான்" என்று தமக்குத் தாமே கூறிக் கொண்டார். இதைக் கேட்டு வந்த ஆள் சுத்தோதன அரசரிடம் போய் இவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டதைத் தெரிவித்தார், அதைக் கேட்ட சுத்தோதன அரசர், சித்தார்த்த குமரன் கருதிய பொருளை அறியாமல், தமது பேரனுக்கு இராகுலன் என்று பெயர் சூட்டினார்.