பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பின் முகவுரை

கௌதம புத்தர் என்னும் இந்நூல் வெளிவந்து இப்போது பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன. இப்போது இது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.

பௌத்த மதத்தை உண்டாக்கிய பகவன் கௌதம புத்தர் நம்முடைய பாரததேசத்தில் பிறந்தவர். கௌதம புத்தர் போதிஞானம் பெற்ற புத்தகயா நகரம் இன்றும் புண்ணியத்தலமாகப் போற்றப்படுகிறது. இலங்கை, பர்மா, திபெத்து முதலிய பௌத்த நாடுகளிலுள்ள பௌத்தர்கள் ஆண்டுதோறும் புத்தகயைக்குத் தலயாத்திரையாக வந்து அவ்விடத்தைக் கண்டு வணங்கிச் செல்கிறார்கள். அவர்கள் பாரத தேசத்தை, பகவன் புத்தர் பிறந்தருளிய காரணத்தினாலே, தங்கள் புண்ணிய பூமியாகக் கருதிப் போற்றுகிறார்கள். இந்தப் பெரிய உலகத்திலே, மூன்றில் ஒருபங்கு ஜனத்தொகையினர் பௌத்த மதத்தினராக இருக்கிறார்கள். பௌத்தக் கொள்கைகளைப் பின்பற்றிப் பகவன் புத்தரைப் போற்றுகிற அவர்கள் புத்தர் பிறந்த பாரத தேசத்தைப் புண்ணிய பூமியாகக் கருதுவதில் வியப்பில்லை.

உலகப் பெரியார்களில் ஒருவராக விளங்கும் கௌதம புத்தர் பாரத தேசத்தில் தோன்றியது, பாரத மக்கள் அனைவரும் பெருமைப் படத்தக்க தொன்றாகும். பெருமைப் படுவதுமட்டுமல்லாமல் அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவருடைய போதனை களையும் நமது தேசத்து மக்கள் அனைவருடைய கடமையுமாகும். இதற்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை. முதற்பதிப்பில் இல்லாத சில புது விஷயங்கள் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.