பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

நிலா, பால் போன்ற ஒளியை எங்கும் பரப்பிக் கொண்டு வானத்தில் எழுந்தது. முழுநிலா தோன்றும் இந்தக் காட்சி, போதிசத்துவராகிய கௌதமர் பத்துப் பாரமிதைகளை நிறைவேற்றி முடித்துவிட்டார் என்பதை உலகத் தாருக்குக் கூறுவதுபோலக் காணப்பட்டது. அப்போது போதிசத்துவர், அஸ்வத (அரச) மரத்தில் முதுகை வைத்துக் கிழக்கு முகமாக அமர்ந்து தியானத்தில் இருந்தார். இவருடைய உடம்பில் இருந்து வெளிப்பட்ட ஒளியானது இவர் இருந்த இடத்தில் சுடரொளிபோல் காணப்பட்டது.

அப்போது திடீரென்று சூறாவளிக் காற்று வீசியது. ஆகாயம் எங்கும் மேகங்கள் சூழ்ந்து கொண்டன. இருள் மூடிக்கொண்டது. பயங்கரமாக இடி இடித்தது. பூமி அதிர்ந்தது. அவ்விடத்தில் வந்திருந்த தேவர்களும் பிரமர்களும் அஞ்சி ஓடிப்போனார்கள். இடியும் மின்னலும் அச்சத்தை உண்டாக்கின. வால்வெள்ளிகள் காணப்பட்டன. விண்மீன்கள் எரிந்து விழுந்தன. காக்கைகள் கரைந்து ஓலமிட்டன. ஆந்தைகளும் மர நாய்களும் பயங்கரமாக அலறி ஊளையிட்டன. எலும்புக் கூடுகள் நடந்துவருவதுபோலப் பேய்கள் வெளிப்பட்டன. தலையற்ற உடல்கள் ஆகாயத்தில் பறந்தன. வாள், வில், வேல், கோடரி, ஈட்டி, கட்டாரி முதலிய ஆயுதங்களை ஏந்திக்கொண்டு பூதங்கள் அங்கே வந்தன. 'பிடியுங்கள்! அடியுங்கள்! கட்டுங்கள்! கொல்லுங்கள்!' என்னும் பயங்கரமான குரல்கள் கேட்டன. இவ்வாறு பயங்கரமான சேனையுடன் வந்தவன் யார்? இவ்வாறு வந்தவன் தேவசேனைகளை யும் பிரம சேனைகளையும் முதுகு காட்டி ஓடச்செய்யும் பேராற்றல் வாய்ந்த வசவர்த்திமாரனே.

இவ்வாறு ஆர்ப்பரித்துக் கொண்டு போதிசத்துவர் மீது போருக்கு வந்த வசவர்த்திமாரன், அவருக்கு அருகே வர முடிய வில்லை. தூரத்தி லேயே நின்றான், கௌதமமுனிவர் அஞ்சாமல், மான் கூட்டத்தின் இடையே சிங்கம் போலவும், பறவைகளின் கூட்டத்தில் கருடன் போலவும் வீற்றிருந்தார். முன் பிறப்புக்களிலே பாரதைகளை நிறை வேற்றினவர். ஆகையினாலே இவர் சிறிதும் அஞ்சாமல் வீற்றிருந்தார். சேனைகளுடன் வந்த மாரன், இவரைப் பார்த்து உரத்தக் குரலில் இவ்வாறு கூறினான். "நான் உலகத்திலே பெரியவன்; உயர்ந்தவன்; மேலானவன். நீயோ அற்ப சிறு மனிதன். பெரியவனாகிய நான் வரும் போது அற்ப மனிதனாகிய நீ எழுந்து நின்று வணங்காமல் ஏன் உட்கார்ந்திருக்கிறாய்? உனக்கு மட்டுமரியாதை இல்லையா? உனக்கு