பக்கம்:மயில்விழி மான்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மயில்விழி மான்

செய்கிறான் என்று அறிந்து ஆந்திரர்கள், "அரவவாடு சாவல!" என்று கத்தினார்கள். உடனே நமச்சிவாயத்துக்கும் கோபம் வந்தது. "உனக்கு ஆந்திர ராஜ்யமு காவல என்றால், அதற்கு அரவவாடு எதற்காகச் சாக வேண்டும்? நீ சாவல! உங்கப்பன் சாவல! உங்க பாட்டன், பூட்டன் சாவல!" என்று இரைந்தானாம். உடனே அவர்கள் வண்டியில் புகுந்து அவனை வெளியில் பிளாட் பாரத்தில் இழுத்துப் போட்டு அடி அடி என்று அடித்துவிட்டார்களாம். முகம் உடம்பு எல்லாம் இரத்த விளாறாகிவிட்டதாம். நாடகக் கோஷ்டியைச் சேர்ந்த மற்றவர்கள் விஜயவாடாவிலிருந்து மறுநாள் புறப்பட்ட வேறு ரெயிலில் ஏறிப் போய் விட்டார்கள். தவுல் கந்தப்பப் பிள்ளையோடு போன நாதஸ்வர வித்துவான் மிரண்டு போய் ஊருக்குத் திரும்பி விட்டார். கந்தப்பப் பிள்ளையும், படுகாயம் பட்டுக் கிடந்த நமச்சிவாயத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

"சில பேருக்கு உயிர் ரொம்பக் கெட்டி, ஐயா! நமச்சிவாயம் டி.பி. வியாதியில் சாகாமல் பிழைத்தான். இப்போது ஆந்திரா வெறியிலும் சாகாமல் பிழைத்து விட்டான். ஆஸ்பத்திரியிலேதான் இருக்கிறான். அவனுடைய குணம் மட்டும் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. கேளுங்கள், இந்த வேடிக்கையை! - நேற்றிரவு ரேடியோவில் நீலமணியின் கச்சேரி கேட்டீர்களா?" என்றார் கந்தப்ப பிள்ளை.

"ஆமாம்; கேட்டேன்! மிக்க நன்றாயிருந்தது! உயர்ந்த சங்கீதம்!" என்றேன்.