பக்கம்:மயில்விழி மான்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

மயில்விழி மான்

பாருங்கள்! தயாரான வெடிகுண்டுகள் தாமே வெடித்துக் கொண்டு இரகசியத்தை வெளிப்படுத்தி விட்டன. என்னையும் பெரும்பாவம் செய்யாமல் காப்பாற்றின. நான் உத்தேசித்திருந்தபடி செய்திருந்து, பிறகு நீலமணியிடம் உண்மையை அறிந்து கொண்டிருந்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? கடவுள் தடுத்தாட் கொண்டார்! முருகனின் கருணையே கருணை!" என்று கூறிய கந்தப்பப் பிள்ளை, கண்களைப் பாதி மூடிய வண்ணம் மேல்நோக்கிப் பார்த்துக்கொண்டு பின்வரும் பாடலைப் பாடினார்:

வருவாய் மயில்மீ தினிலே!
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
முருகா! முருகா! முருகா!