பக்கம்:மயில்விழி மான்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தப்பிலி கப்

131

சொல்லிக் கதாநாயகி ஒவ்வொரு நகையாகக் கழற்றிக் கொடுக்கிறாள். ஒவ்வொரு நகைக்கும் அவள் ஒரு பாட்டும், பதிலுக்குக் கதாநாயகன் ஒரு பாட்டும் பாடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் சபையில் முக்கியமாகப் பெண்மணிகள் பகுதியில் உண்டான அல்லோலகல்லோலத்தைச் சொல்ல சாத்தியம் இல்லை. விம்மி விம்மி அழுதபடியால் தொண்டை காய்ந்துபோய், சோடா வாங்கிக் குடித்துத் தாகசாந்தி செய்து கொண்டு, மறுபடியும் அவர்கள் அழலானார்கள். கதாநாயகி தன் வைரக் கம்மலைக் கழற்றிக் கொடுத்த போது ஒரு பெண்மணி உருக்க மிகுதியால் மூர்ச்சை அடைந்தே விழுந்து விட்டாள் என்றால், வேறு சொல்லவும் வேண்டுமோ?

எல்லா நகைகளையும் கழற்றி வைத்துவிட்டுக் கதாநாயகி, "இவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் இருவரும் கூலி வேலை செய்து பிழைப்போம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் ஒரு வரங் கொடுங்கள்" என்று கேட்கிறாள். "என் உயிரைக் கேட்டாலும் தருகிறேன்!" என்கிறான் கதாநாயகன். "இனிமேல் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை என்று சபதஞ்செய்யுங்கள்" என்கிறாள். "ஆண்டவன் ஆணை! உன் மேல் ஆணை! நம் அருமைக் குழந்தையின் மேல் ஆணை! நான் இனிக் குதிரைப் பந்தயத்திற்குப் போவதில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை" என்று கதாநாயகன் சபதஞ் செய்கிறான். அச்சமயம் சபையில் வீற்றிருந்தவர்களில் அநேகரும் இவ்வாறே தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள்.