பக்கம்:மயில்விழி மான்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

மயில்விழி மான்

மந்தையைப் போல் கடல் நீரைக் கிழித்துக் கொண்டு நான் இருந்த திசையை நோக்கி வெகுவேகமாக வந்து கொண்டிருந்தன. அப்போது நான் அடைந்த பயத்தைப் போல் என் வாழ்நாளில் எப்போதும் அடைந்ததில்லை.

என் நிலைமை இன்னதென்பதை என்னுடைய பயமே எனக்கு உணர்த்திவிட்டது. அது வரைக்கும் கடல் நீர் வடியும் நேரமாயிருந்தபடியால், நான் இருந்த தீவைச் சுற்றிக் கொஞ்சம் பூமிப் பிரதேசம் தெரிந்தது. கடல் பொங்க ஆரம்பித்து விட்டால் ஜலம் தரையெல்லாம் முழுக அடித்துக் கொண்டு மேலே வந்து விடும். நான் அப்போதிருந்த பாறை கூடத் தண்ணீரில் மூழ்கிவிடும். அப்படியென்றால், சுறாமீன்கள் அங்கேயும் வந்துவிடக்கூடும்.

நான் பார்த்துக் கொண்டிருந்தபோது கடல் பொங்க ஆரம்பித்து விட்டதைப் பார்த்தேன். உடனே குதித்து எழுந்து அந்தக் கற்பாறைகளின் மீது தத்தித் தாவி ஏறினேன். அங்கங்கே வழுக்கிய இடங்களில் கீழே விழுந்து மறுபடி எழுந்தேன். உயிர் மீதுள்ள ஆசை, முக்கியமாக அந்தச் சுறா மீன்களின் பற்களின், இடையில் அகப்பட்டுக் கொள்வதைப் பற்றிய பீதி என்னை அங்கு நிற்கவிடாமல் துரத்தி அடித்தது.

சுமார் அரை மணி நேரம் விழுந்து விழுந்து ஓடித்தாவி ஏறி மூச்சுத் திணறிய பிறகு, அவ்வளவு முயற்சியும் வீண் என்று கண்டேன்.