பக்கம்:மயில்விழி மான்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

15

எனக்கு எதிரே செங்குத்தான ஒரு பெரிய மதில் சுவர் நின்றது. அண்ணாந்து பார்த்தால் உச்சித் தெரியாதபடி அவ்வளவு உயரமான சுவர், அந்தச் சுவர் ஓரமாகவே வழுக்கிய பாறைகளில் நிதானமாகக் கால் வைத்து நடந்து சிறிது தூரம் சென்றேன். சுவர் முடிவில்லாமல் சென்றது.

ஏற்கனவே களைத்துப் போயிருந்தேன். அத்துடன் ஏமாற்றமும் மனச்சோர்வும் சேர்ந்து கொண்டன. அந்த மதில் சுவரில் மண்டையை மோதிக் கொள்ளலாமா என்று தோன்றியது. அதில் ஒன்றும் பயனில்லை. அதைக் காட்டிலும் மலைப்பாறை உச்சியிலிருந்து கடலில் குதித்து உயிரை விடலாம் என்று தோன்றியது. ஆகாச விமானத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்து விட்டு இப்போது உயிர் விடுவதற்காகப் பாறையிலிருந்து குதிக்க வேண்டியிருப்பதை நினைத்தால் எனக்கே சிரிப்பு வந்தது.

கடலோரமாக உயரமான பாறையொன்றை அணுகி அதன் பேரில் உட்கார்ந்தேன். என்னுடைய நிலைமை பற்றி நிதானமாக யோசிக்கலுற்றேன். எதிரே யானைகளைக் கூட விழுங்கக் கூடிய சுறாமீன்கள் மந்தை மந்தையாக உலாவும் கடல். அப்பால் மனிதர்களைப் பலி கொடுத்து உண்ணும் ராட்சஸ மக்கள் வசிக்கும் தீவு. இந்தப் பக்கம் திரும்பினால், கண்ணுக்கெட்டிய தூரம் வானை நோக்கி உயர்ந்திருந்த மதில் சுவர். நான் இருந்த பாறைக்குச் சற்றுத் தூரத்தில், இன்னொரு பாறையின் பேரில் இரண்டு பெரிய கழுகுகள் வந்து உட்கார்ந்தன.