பக்கம்:மயில்விழி மான்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மயில்விழி மான்

அவை தான் எனக்குத் தோழர்கள். அவற்றின் நோக்கம் என்ன என்பது பற்றி அதிகமாகச் சந்தேகப்படுவதற்கில்லை. அடுத்தத் தீவிலுள்ள ராட்சஸ மக்களை விட இந்தக் கழுகுகள் நல்லவை தான். எனெனில் நான் இறந்து போகும் வரையில் காத்திருப்பதற்கு வேண்டிய பொறுமை இவற்றுக்கு இருக்கின்றன அல்லவா?

முடிவில் இந்தக் கழுகுகளுக்கு இரையாவதற்குத் தானா உயிர் பிழைத்தோம் என்று எண்ணினேன். இல்லை, இல்லை. வேறு வழி ஏதேனும் இருக்க வேண்டும். உயிர் உள்ள வரையில் நம்பிக்கைக்கு இடம் உண்டு அல்லவா? மீண்டும் பிரயத்தனம் செய்து பார்க்க வேண்டும். இந்தக் கோட்டை மதில் சுவர் மேல் ஏறுவதற்கு எங்கேயாவது வழி இல்லாமலா போகும்? எப்படியாவது இந்த மதிலைக் கடந்து உள்ளே போய்ப் பார்க்க வேண்டும். யாரோ நாகரிகத்தில் முன்னேற்றமடைந்த மனிதர்கள் இந்த மதிலைக் கட்டியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அடுத்தாற்போல், அந்த இன்னொரு தீவில் உள்ள ராட்ஸதர்கள் கோட்டைக் கட்டிக்கொள்ளவில்லையே? ஒரு வேளை அந்தக் காட்டுமிராண்டிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்தத் தீவில் உள்ளவர்கள் இவ்வளவு பெரிய மதில் சுவர் எழுப்பியிருக்கிறார்களோ என்னமோ? அப்படியும் இருக்கலாம் அல்லது கோட்டை கட்டியவர்கள் அனைவரும் மாண்டு மடிந்து போயிருக்கலாம். கோட்டைக்குள் இப்போது வசிப்பவர்கள் காட்டு மிராண்டி இனத்தவராகவே இருக்கலாம். அல்லது மனிதர்களே