பக்கம்:மயில்விழி மான்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மயில்விழி மான்

ந்த வர்ண ஜாலக் காட்சிகளில் சிந்தையைச் செலுத்தி உட்கார்ந்திருந்த பெண்ணை நோக்கி நான் மெள்ள மெள்ள நடந்து சென்றேன். பாதை நல்ல பாதையாக இல்லை. பள்ளத்திலிருந்து மேட்டிலேறி மேட்டிலிருந்து பள்ளத்திலிறங்கி, மறுபடியும் மேட்டிலேறி, சில இடங்களில் தாண்டிக் குதித்து, சில இடங்களில் காலாலும் கையாலும் தவழ்ந்து, - இப்படியெல்லாம் போக வேண்டியிருந்தது. அது ஒன்றையும் நான் லட்சியம் செய்யவில்லை. இரும்பைக் காந்தம் இழுக்கும் என்பார்களே, அது மாதிரி ஏதோ ஒரு சக்தி என்னை இழுத்துக் கொண்டு சென்றது.

அந்தப் பெண்ணின் பின்புறமாக அவளுக்கு வெகு சமீபத்தில் போய்விட்டேன். அப்போது என் கால்கள் தாமாக நின்று விட்டன. ஏனெனில், அவள் பாடத் தொடங்கினாள். பாட்டை ஏதோ இயன்ற வரையில் ஞாபகப்படுத்திக் கொண்டு சொல்கிறேன். சிற்சில வார்த்தைகள் மாறுதலாகவும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. கருத்து ஒன்றுதான்.

"இன்பக் கனவினிலே—சகியே
இன்னிசை பாடிவந்தான்—எவனோ
இன்னிசை பாடிவந்தான் (இ)

பொன் முகத்தில் நகைபூத்திட நோக்கினான்
கன்னங்குழித்திடக் கண்மலர் சூட்டினான் (இ)

பொன்னி நதிக்கரையில்—வெண்ணிலா
பொங்கிப் பொழிகையிலே
என்பும் உருகும் நல்கீதங்கள் பாடினான்
என்னகந் தொட்டுபின் எங்கேயோ சென்றிட்டான்!" (இ)